Wednesday, June 15, 2011

சொற்களை பிரித்து சேர்த்து எழுதுங்கோ பிள்ளைகள்...


அனேகமாக ரெண்டாம் ஆண்டு, மூண்டாம் ஆண்டு காலங்களிலை சிலம்பல்த்தலை பிரம்பை ஆட்டிக்கொண்டு டீச்சர் அடைச்ச குரலிலை மேற்கண்ட வசனத்தை கத்தி கத்தி சொன்ன கதைகள் கொஞ்சம் உங்களுக்கு நினைவுக்கு வரலாம் எண்டு கருதுறன்.
பல் + பசை பற்பசை என்றும் சிற்சில என்பதை சில + சில எண்டும் சேர்த்தும் பிரிச்சும்; எழுதியிருப்பியள். கோதாரியில விழுந்த நான் அதுகளை பப்பசை எண்டும் சில்லு சில எண்டும் எழுதின கதைகள் வேற.

இங்க அந்த நேரத்திலை நாங்கள் ஓட்டைக்காச்சட்டையையும் போட்டு மணியடித்துக்கொண்டு திரிந்த நாட்களைப்போல இங்க உள்ள குறுனிகள் படுறபாடு பெரும்பாடு.
நாங்கள் அந்த நேரத்திலை தமிழிலை பள்ளிக்கூடத்திலை கடமைக்கு படிச்சுப்போட்டு ரீயூசனுக்கு இங்கிலீசுக்கு, பாவம் ரீச்சர் நெடுகலும் அவவை ஏமாத்தக்கூடாது எண்ட எண்ணத்திலைதானே போறனாங்கள்.
இங்கை நிலைமை தலைகரணம் கண்டியளோ. குறுனிகள் கியா மாயா எண்டு இங்கிலீசு பள்ளிமுடிந்து ஓடிவந்து தமிழுக்கு ரியூசனுக்கு போகுதுகள்.
அதுகளின்ட நடவடிக்கைகளை கொஞ்சம் புலனாய்வு செய்ததிலைதான் இந்த சேத்தெழுதல் பரித்தெழுதல் நினைவுகள் வந்திச்சு.

இந்த சேத்தெழுதல், பிரித்தெழுதல் அந்த நேரத்திலையே கிளியர் ஆகாமல் விட்டால் பிறகு வாழ்க்கை முழுக்க சிக்கல்தான் கண்டியளோ.
அப்புடியான சிக்கலுகள் எனக்கு பாடையில போகுமட்டும் இருக்கு எண்டு எனக்கு தெரியும். எல்லாம் அந்த சந்திரமோகன் வாத்தியின்ட சாபமாத்தான் இருக்கும்.
நாங்கள் நாலாம் ஆண்டு படிக்கேக்க பள்ளிக்குடத்துக்கு தமிழ் படிப்பிக்க வந்தவர் சந்திரமோகன் வாத்தியார். வண்டியும், ண்டியுமாக ஆள் சைக்கிள்ள இருந்து மிதிச்சார் எண்டால் எண்டுமூலைபட்டம் முச்சை சிக்குப்பட்டு அங்கையும் இங்கையும் அல்லாடிக்கொண்டு நிக்குமாப்போல இருக்கும். பின்னாலை நிண்டு பாத்தால் சைக்கிள் சீட்டை காணஏலாது.

அவருக்கும் எனக்குமான அறிமுகம் சும்மா தளபதி படத்திலை மம்முட்டியும், ரசினிகாந்தும் அறிமுகமானதுபோல சுப்பரான கட்டம்.
அண்டைக்கு ஒரு வியாழக்கிழமை எண்டு நினைக்கிறன். வாத்திமார் ஸ்ராப் ரூமிலை இருந்து அலட்டுறதுக்கு தோதாத்தானே எங்களுக்கு பீட்டிப்பாடம் (உடற்பயிற்சி) எண்ட ஒண்டை ரைம்டேபிளிலை வக்கிறவை. சரி இண்டைக்கு ஏதாவது விளையாடுவம் எண்டுபோட்டு முழுபெடியளும் கபடி மாத்தி ஒப்பு எண்டு விளையாடத்தொடங்கிட்டாங்கள். எனக்கு அந்த விளையாட்டு சரிப்பட்டு வராது.
பாழ்படுவார் அத்தனைபேரும் சேர்த்து ஒருக்கா பிடிச்சாங்கள் எண்டால் பழைய கோவங்கள் எல்லாத்தையும் சேத்துவச்சு பிதுக்கிப்போட்டுத்தான் விடுவாங்கள்.
ஆகவே எனது கண்கள் அருச்சுனனின் அம்புப்பார்வைபோல வேறெதுவும் தெரியாமல் அசம்பிளி நடக்கிற இடத்திலை நிண்ட மாமரத்தில் இருந்த மாங்காய் ஒன்றின் மேலேயே இருந்தது. மற்றய நிகழ்வகள் ஒன்றிலும் எந்தவித ஒன்றிப்பும் இல்லை. இலக்கு மாங்காய் மாங்காய் மட்டுமே. (மாங்காய் எண்டதுமே எப்படி பனங்காட்டுத்தமிழ் சங்கத்தமிழ் ஆகுதெண்டதை கண்டியளே)

எதேட்சையாக ஒரு கல்லை எடுத்து லக்குப்பார்த்து விட்டன் ஒரு கல்லை, சரியா பிடிக்கேல்லை. அந்தநேரம் பார்த்து நாசமறுந்த இந்த சந்திரமோகன்சேர் சைக்கிளை விட இறங்கேக்கை முதுகிலை கும் எண்டு விழுந்திச்சு கல்லு.
பிறகென்ன வட்டாலக்கடி வடைகறிதான்.
சரி சந்திரமோகன் வாத்தியை நினைச்சு விசியத்தை மறந்துபோனன் பாத்தியளே!
ம்ம்ம் சேத்து பிரித்து எழுதுவதிலை நிதானம் படு அவதானமாக வேண்டும் கண்டியளோ.

இப்புடித்தான் ஒரு மாமனார் மருமோணிட்டை, டேய் உன்டை மச்சாள்மாரிண்டை பாவித்த சைக்கிள் இருக்கெல்ல அதை விக்கப்போறன் ஒரு போட் எழுதி வாசல்ல போடு எண்டாராம்.
மருமோன் கேட்டானாம் என்னெண்டுமாமா எழுத எண்டு
அவர் சொல்லி இருக்கிறார் 'பாவித்த பெண்;கள்சைக்கிள் உடன் விற்பனைக்குண்டு' என்று எழுதி வாசல்ல போடு எண்டு.
இந்த வேதாளம் எழுதினது எப்படித்தெரியுமே
'பாவித்தபெண்கள் சைக்கிளுடன் விற்பனைக்குண்டு'

இதுபோலதான் ஊருக்க இன்னுமொரு வேதாளம் பெயிண்ட் அடித்துக்கொண்டு திரிஞ்சது. கொஞ்சம் மேல்வீட்ட சுகமில்லாத பெடியன்தான். என்ன செய்யிறது குறைமாதங்களை பெத்தால் தாய் தேப்பனுக்குத்தானே பாருங்கோ கவலை.
அப்புடித்தான் பழனிச்சாமியும், மாம்பழமக்காவும் அவனை நினைச்சு கவலைப்பட்டிருப்பினம். ஆனால் பெடியன்ட பெயிண்ட் அடியை அநியாயம் சொல்லக்கூடாது.
கோயில்ல மடப்பளிக்கு பக்கத்திலை பிராமாணர்கள் சாப்பிடும் இடம் இருந்திச்சு, அதுக்குள்ளை எல்லாரும் எட்டி பார்க்கினம் எண்டு, 'பிராமணர்கள் சாப்பிடும் இடம் எண்டு சின்ன பலகையை கொடுத்து பெயிண்டாலை எழுதி கொழுவச்சொல்லிச்சினம்.
பேடியன் எழுதினான். பிராமணர் எண்டு எழுதும்போதே பலகை முடிஞ்சுபோச்சு எனவே மிச்சத்தை கீழே எழுதியிருந்தான்.

பிராமணர்
கள் சாப்பிடும் இடம்.

இப்ப விளங்குதே கண்டியளோ. அதுதான் சொல்லுறன் இந்த சேத்து பிரிச்சு எழுதுறது முக்கியம் கண்டியளோ.
பதிவுலக குஞ்சுகளுக்கு தவறணையான் கனநாளாய் வீவு விட்டுப்போட்டன். இப்ப கொஞ்சம் ஐ பீல் பிறீ கண்டியளோ.
அங்கை இங்க வலைகளிலை ஓடித்திரியேக்கை இங்காலப்பக்கமும் ஒரு எட்டு எட்டிப்பாருங்கோவன், வெய்யிலுக்கு தவறணையிண்ட கள்ளு இதமாய் இருக்கும் பாருங்கோ. தனியா வராமல் சினேகிதங்களையும் கூட்டியாருங்கோ.
சரி கூட்டாளிகளே இனி தொடர்ந்து வருவன், கலந்து கட்டுவம்.