Friday, July 30, 2010

பழசுகள் பறஞ்ச பழைய கதைகள்.II

பொதுவா ராவழியில கனத்த இருட்டுக்க போகேக்க கனக்கபேருக்கு ஓட்டமட்டிக்கா பாட்டுவரும், இன்னும் சிலபேருக்கு தூசணங்கள் எல்லாம் வாய்க்க வரும், ஏன் எண்டு நினைக்கிறியள்? பயம்தான்.
எங்கட பழசுகளும் அப்படித்தானாம். இந்த விசியத்தில ஆளையாள் நக்கல் அடிப்பினம். அப்படி அவை வரரேக்க கனக்க விளையாட்டுக்கள் நடக்குமாம்.
ஒருக்கா சித்தம்பலத்தாரும், கனகரும் இப்படி கச்சேரியும் பாhத்துப்போட்டு, அங்க ஒரு சினேகிதர் வீட்டில இரவு களியாண விருந்திலையும் கலந்துகொண்டுபோட்டு, கனக்க பலகாரங்களும் அவையள் கட்டி கொடுக்க வாங்கி பின்னால கட்டிக்கொண்டு வந்தவையாம். அப்ப கோம்பயன் மடத்தடி சுடலை வரேக்க அப்புமாருக்கு பாட்டுகளும் தேவாரங்களும் வாய்க்க வந்திச்சாம்.
இருந்தாப்போல கண்டுக்குட்டி அளவில பெரிய கறுப்பு நாயொன்று விட்டு திரத்திச்சாம். ஆனால் குலைக்கவில்லையாம். சித்தம்பலத்தார் டேய்..இது நாயில்லை வேற விளையாட்டு பின்னால திரும்பி பார்க்காமல் மிதியடா என்று கத்த இரண்டு பேரும் மிதிக்க மிதிக்க சைக்கிள் ஸ்பீட்டாய் போக காணலையாம். பின்னால மாட்டுத்தாள் பாக்கில இருந்த பலகாரத்தை கொற கொற என்று எலி அரித்சாப்போல சத்தம் வந்திச்சாம்.

அங்கால இருக்கிற வைரவர் கோவில்ல சைக்கிள்ள இருந்து இறங்கி. கோவில் கிணத்தடியில கை கால் அலம்பிப்போட்டு, திருநூத்தை எடுத்து நெத்தி முழுசாய்ப்பூசிப்போட்டு பார்த்தா மாட்டுத்தாள் பை கட்டின படி அப்படியே இருக்காம். இந்தாடா கனகு, அந்த சவத்தை அப்படியே தூக்கி எறிஞ்சுபோட்டு வா கண்டியோ! என்று சித்தம்பலத்தார் சொல்ல அங்கயே தூக்கி எறிஞ்சுபோட்டு வந்திசிசனமாம்.
இப்படி அப்புவவை சொன்ன பேய்க்கதைகள் இன்னும் கனக்க. அரைவாசி புளுகு.

முற்ற ஒரு கதை சொன்னவை கண்டியளோ..அப்ப 1965 அப்படி, நடந்த கதை ஒன்று இது பற்றி அப்போதைய பேப்பர்களில எல்லாம் பரவலா கதை அடிப்பட்டதாம்.
விசியம் என்ன எண்டால் அதுக்கு பெயர் “மர்மமனிதன்”.
அந்த நேரத்தில இரவு வழிய கதவு பூட்டினபடிதான் இருக்குமாம், ஓடுகீடு பிரித்த தடையங்களும் இருக்காதாம், ஆனால் தொடர்ச்சியாக கனக்க வீடுவழிய மர்ம ஆசாமி ஒருத்தன், உலாவிறதை கனக்கபேர் கண்டுபோட்டினமாம். கதை விறு விறு எண்டு பரவி சனங்களுக்கு ராத்திரியில பீதி வந்து பேதியாப்போச்சாம்.
வாசலில தண்ணி வைச்சும், தலைமாட்டுக்க தண்ணி வச்சும்தானாம் சனங்கள் படுக்குங்களாம். இங்க மர்ம மனிதன், அங்க மர்ம மனிதன் எண்டு சனம் அல்லோல கல்லோலப்பட கடைசியில பொலிஸ் காரங்கள், இரவு முழுக்க பல ஏரியாக்களில நிண்டு, ஒரு மாதிரி அந்த மர்ம மனிதனை பிடிச்சு போட்டாங்களாம்.
ஆள் ஒன்றும் மர்ம மனிசன் இல்லை சித்தசுவாதீனம் இல்லாத ஆள் ஒன்றுதானாம்.

உப்புடி பழசுகளின்ட கதையள் அந்த மாதிரி. இதுக்குள்ள அப்போதைய ஏரியா சண்டியர்கள், சண்டிச்சிகள் கதைகள் வேற கதைப்பினம். கீரிமலைப்பக்கம் இருந்த அப்போதைய சௌர்ணாக்கா வியாழி, ஆரியகுளம் மணியன், பேந்துவந்த கொட்டடி போயா என்று கனக்க சண்டியர்கள் பற்றியெல்லாம் கதைப்பினம். இதில போயா அண்ணன்ட கதை எனக்கு ரொம்ப பிடிக்கும் கண்டியளோ.
கொட்டடிக்குள்ள ஒரு சின்ன அசைவு எண்டாலும் போயாண்ணைக்கு தெரிந்துவிடுமாம். எவனும் சண்டித்தனம் பண்ணிக்கொண்டு கொட்டடிக்குள்ள வர ஏலாதாம் கண்டியளோ! ஆனால் ஆள் ஒரு கறுத்த வாடலாம். சறமும் கட்டி நல்ல மாட்டின் சேட் புள்கையா விட்டுத்தானாம் திரிவார்.

1983 ற்கு பிறகு போராட்ட இயக்கங்கள் வெளிக்கிட்டதால சண்டியன்மார் அடங்கிட்டினமாம். சில பேர் அடங்காமல் போஸ்டில தூங்கினதும் இருக்காம்.
போயா அண்ணை அப்படி அடங்காத ஒரு சிங்கமாத்தானாம் திரிஞ்சார்.
தனக்கு வெடி விழப்போகுது எண்டு, தெரிஞ்சு வேண்டும் எண்டே பொலிஸிலை மாட்டுப்பட்டவராம். ஆனா என்ன? போயாண்ணையை கோட்டுக்கு கொண்டுபோக கோட்டுக்கு லோயர்கள் இரண்டுபேர் வந்து. சரமாரியா போயாண்ணைமேல சுட்டுவிட்டு ஓடிவிட்டார்களாம். லோயர்மார் போல வந்தது ஒரு இயக்க காரங்கள்தானாம். பிறகு போயாண்ணை இரத்த வெள்ளத்துக்க கிடந்தாலும் சாகவில்லை, ஒருமாதிரி உயிரை கையில பிடிச்சுக்கொண்டு, யாழ்ப்பாணம் ஆசுப்பத்திரிக்கு கொண்டு போய் ஒரு மாதிரி உயிர் தப்பி. பிறகு வோட்டில இருந்திருக்கிறார்.

பிறகு நடந்த சங்கதியை பாருங்கோவன். அண்ணையை ரெகுலர் செக்கப் செய்யிற டாக்குத்தர் மார் வந்துட்டுபோக வேறு இரண்டு இளம் வைத்தியர்மார் வந்து போயாண்ணையை செக்கப் பண்ணிப்போட்டு, என்ன மாதிரி ஐயா! நோ எதும் இருக்குதோ? ஒழுங்கா சாப்பிடுறியளோ என்றெல்லாம் விசாரித்திருக்கினம், போயாண்ணையும், ஓம் ராசா நான் தப்பி வந்திண்டன் எண்டு நினைக்கிறன், இப்ப ஒழுங்கா சாப்பிடுறன் என்றிருக்கின்றார். பிறகு பட்பட் என்று சத்தம். போயாண்ணை நிரந்தரமாகவே போய்ச்சேர்ந்திட்டாராம் கண்டியளோ! லோயர் மாரிட்ட தப்பி பிறகு டாக்குத்தர் மாரிட்ட போடுபட்டுட்டார் போயாண்ணை.

இப்படி இந்த பழசுகள் சொல்லுற கதைகள்ல இருந்துதான் நான் பிறக்கிறதுக்கு முந்தி நடந்த கனக்க விசியங்களை நான் அறிஞ்சு கொண்டனான் பாருங்கோ.
இப்ப அவேன்ட குறூப்புக்கை கனகர் மட்டும்தான் இன்னும் ஊசலாடிக்கொண்டு திரியுறார். முற்ற நண்பர்கள் எல்லாம் அடுத்த பிறப்பும் எடுத்திருப்பினம்.
எல்லாருடைய செத்தவீட்டையும் சீரும் சிறப்புமாய் முடித்து, அந்தரட்டியீறாய் நின்று முடித்து குடுத்ததிலை எனக்கு திருப்திதான். ஆனால் என்ன ஒரு ஒற்றுமை எண்டால் என்ட நண்பர்களாக இருந்த ஆறு பேரிலையும் ஒருவரும், நோய் வந்து இழுத்துக்கிழுத்து பிள்ளையள் பேரப்பிள்ளையளுக்கு கஸ்டம் கொடுத்து சாகவில்லை. திடீர் என்றுதான் போய்ச் சேர்ந்ததுகள் புண்ணிய சீவனுகள்.
முதல்ல சித்தம்பலத்தார் சாகேக்க நான் தாங்கேலாம அழுதனான் கண்டனியளோ!
பிறகு யோகர், சாமியர், வல்லிபுரம், பொன்னுத்துரையர் எண்டு போகேக்க நான் அழுது அவர்களை கரைச்சல் கொடுக்காம அவர்கள் எப்போதும் என்னை பார்க்கிறதுபோல சந்தோசமாகவே அனுப்பி வைச்சிருக்கிறன்.

என்னதான் முசுப்பாத்தியா இதையெல்லாம் அவர்களின்ட கதைகளாய் எழுதினாலும், இப்ப அவையை நினைத்தாலும் நெஞ்சம் கனக்குது கண்டியளோ.
நான் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பெயில் விட்டுவிட்டு, அம்மாட்டை அடிவாங்கிப்போட்டு அழுதுகொண்டு ரோட்டால ஓடேக்க பிடிச்சு வச்சு, மடத்தல் ரஸ்க் வாங்கித்தந்து, ஆறுதல் தந்தது அவையின்ட மடிதான், பிறகு வளர்ந்த காலங்களில, டேய் அங்க ரவுண்டப்பாம் போகாத, இங்க கிளைமோர் வெடிச்சிட்டாம் போகாத என்று தகவல் சொல்லி என்னை பாதுகாத்தது அதுகளின்ர கைகள்தான், நான் கம்பசுக்கு எடுபட்டதும் பெற்றோரைவிட சந்தோசப்பட்டதும் அதுகள்தான்,
நாலுதரம் காதல்ல தோல்வியுற்றவேளைகளில ஆறுதல் சொல்லி சிரிக்கவைத்து ஐந்தாவதுக்கு அத்திவாரம் போட்டுவிட்டதுகளும் அதுகள்தான்.
என்ன செய்வது..அவையின்ட நினைவுகளும், கதைகளும் எனக்கு அவையள்ட வயது வரும்போதும் மறக்காது பாரங்கோ.

Monday, July 26, 2010

பழசுகள் பறஞ்ச பழைய கதைகள்.


ஊரிலை இருக்கேக்க எனக்கு பெடி பெட்டையளுடன் சினேகிதம் இருந்ததை விட கனக்க சீனியர் சிட்டிசன்மாருடன்தான் சினேகிதம் பாராட்டினான் கண்டியளோ.
பாவங்கள் தானே..அதுகளின்ட கதைகளை இப்ப கேட்க ஒருத்தரும்; இருக்காயினம், ஏலாத நேரத்தில தங்கட வாலிப வயசுக்கால விளையாட்டுக்களை கதைச்சு ஆனந்தப்படுறத்துக்கு அவையளுக்கு ஒரு ஆள்தேவைப்படும் என்ட சைக்கோலொஜியை நான் நல்லாய் அறிஞ்சுவைத்திருந்தனான்.
கதைக்கத்தொடங்கினா பல கதைகள் வரும். கொஞ்சம் சுருதியும் ஏத்திப்போட்டு வாயில சுருட்டும்வேற வைச்சினமோ! ரைம்மிசின் கிறு கிறு என்று முன்னால ஓடி 48, 50களுக்கு போய்விடும். கடைசில கதைகேட்க தேவையில்லாம கூப்பிட்டு, இருத்தி அவ்வளவு நேரம் கதைகேட்ட நானே தூசனத்தால பேச்சும் கேட்கவேண்டிய நிலைமைகளும் கனக்க நடந்தது கண்டியளோ.
புலனாய்வுத்துறை என்ன புலனர்வுத்துறை, ஆராரார், எந்த எந்த வீட்டிற்கு போயினம் வரியினம், எந்த பெடிப்பிள்ளை, ஆர்ட பெடிச்சிக்கு ரூட் விடுறார் என்பதெல்லாம் அப்புமாருக்கு அத்துபடி கண்டியளோ.

நானும் என்ன சும்மாவே..கனக்க விசியங்களை இதுகளிடமிருந்துதான் அறிஞ்சுகொள்ளுறனான். நான் எழும்பி போகவிட்டி என்னைப்பெத்தியும் நடக்கும் கச்சேரி என்று எனக்கும் தெரியும்தான். இப்படி அப்பப்ப உவையோட இருந்து அவை சொன்னகதைகளில் பழைய காலத்தில் ஊரில நடந்த சில சுவாரகசியமான விடயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்கின்றேன்.

1967 இல இந்தியாவில இருந்து யாரோ ஒரு சாமியார் வந்திருந்தாராம். அந்த நேரமே அவரிட்ட பொம்பிளைகள்தான் கூடப்போவினமாம். அவரிட்ட ஒருக்கா போய் அவர்ட கையால திருநூறு பூசினா அந்த நாளில் ஏதாவது எதிர்பாராத நன்மை கிடைக்குமாம். இப்படி கொஞ்சம் யாழ்ப்பாணம், வன்னி பக்கம் கொஞ்சம் பேமஸ் ஆயிட்டாராம் சாமி. பிறகு இருந்தாப்போல முறுகண்டி பிள்ளையார் கோவில்ல இருந்து யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோவில்வரை தான் பிரதட்டை பண்ணிக்கொண்டே (உருண்டபடியே) வரப்போறன் என்று அறிவிச்சு அமளிதுமளியா சனங்கள் எல்லாம் வழி நீளத்திற்கு தண்ணீர் தெளித்து, நிலப்பாவடை விரிச்சு,Nவை செய்ததுகளாம். சொன்னமாதிரியே நல்லூரடிக்கும் உருண்டுகொண்டே வந்தும் சேர்ந்தாராம். என்ன?? சேர்ந்த உடனேயே இந்தியாவில இருந்து வந்த பொலிசுக்காறங்கள் இவரை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு போட்டாங்களாம். சாமியார் இந்தியாவிலயும் கனக்க மங்கைகளுடன் திருவிளையாடலாம். அங்க திரத்த ஆள் இங்க ஓடிவந்திருக்கிறார். அது சரி நித்தியானந்தாக்கள் என்ன அவர்ட தாத்தாக்களும் அப்ப இருந்திருக்கினம் பாத்தியளே?

கோப்பாய் நீர்வேலிப்பகம் உள்ள வீடு ஒன்றாம். இது நடந்தது கிட்டத்தட்ட 1917,1918 அப்படி இருக்குமாம். அங்க அப்பு தோட்டங்கள்தானே கனக்க. அப்ப தோட்டத்திற்கு ஒதுக்குப்புறமாய் ஒரு பழைய வீடு இருந்ததாம். அங்க ஒருவரும் எட்டிக்கூடப் பார்க்கிறதில்லையாம். ஏனெண்டு கேட்டால் ராத்திரி நேரம் அங்க போனா.. பெரிய சத்தமாய் “போடவா..போடவா” என்றபடியே கேட்டுக்கொண்டிருக்குமாம். அப்ப அந்த இடத்தில கதிரவேலர் என்ட ஒரு வெறிக்குட்டியர் இருந்தவராம். ஒருநாள் வெறியில தன்ட குடிசைக்குப்போக மனுசிக்காரி அடிச்சு திரத்த, படுக்க இடமில்லாம கதிரவேலர் போய், இந்த தோட்ட வீட்டில படுத்திருக்கிறார். அப்ப நல்லா தூக்கத்தில அயருற நேரம் பார்த்து “போடவா…போடவா” என்று கேட்டிச்சாம், இந்தாள் சீ என்ன இதப்பா என்றுபோட்டு திரும்ப படுத்து அயருற நேரம் “போடவா…போடவா” என்று கேட்க..கதிரவேலர் எவன்டா அவன் என்று தூசனத்தால கேட்க! “போடவா…போடவா” என்று திரும்பவும் கேட்டதாம் “போட்டுத்துலையன் சனியனே நித்திரையை குழப்பிக்கொண்டிருக்கிறாய்” என்று கதிரவேலு சொன்னதும் கூரையை பிச்சுக்கொண்டு, தங்க கட்டிகள், நகைகள், காசுகள் என்று விழுந்திச்சாம். பிறகு கதிரவேலர் பமிலிதானாம் அந்த ஊரில் ரோயல் பமிலியாப்போச்சாம்.
நானும் மல்லாக்க படுத்துக்கொண்டு எத்தனை தரம் விட்டத்தை பார்த்திருப்பன்!

அடுத்தது அவையில கனக்க பேர், அந்த நாட்களில அம்பலவாணர்ட மிருதங்கத்திற்கும், தட்சணாமூர்த்தியிட தவிலுக்கும் பரம ரசிகர்கள். அப்ப எங்க கச்சேரி எண்டாலும் வார்ப்புகளை எல்லாம் வாத்துக்கொண்டு சீக்கிரம் போய்டுவினமாம் கச்சேரி பார்க்க. பிறகு திரும்பி வீட்டுக்கு வர நடுச்சாமம் கழிஞ்சுபோடுமாம். அப்படி அவை வரேக்க, பலவேளைகளில சுடலை கடக்கவேண்டி வருமாம், அப்படி வரும்போது……………………………

என்ன நானும் சொல்ல சொல்ல நல்லாக் கேட்டுக்கொண்டிருப்பியள் என்ன? உண்மையில உங்களுக்கு பழசுகளின்ட கதை வேணும் எண்டால், பிடிச்சிருந்தால், வாசித்துப்போட்டு போகாமல் நல்லா கொமன்ஸ் பண்ணுங்கோ..
பழசுகள் சொன்ன சுடலைக்கதைகள் தொடரும்…

Saturday, July 24, 2010

நான் வருவேன் மீண்டும் வருவேன்.


அண்ணைமார், கண்டிப்பாக அக்காமார் ஏன் எண்டால் அண்ணைமாரைவிட அதிகமான அக்காமார்தான் என்ரை பதிவுகளை விரும்பி படிக்கினம் என்று பல பல சர்வேகள் சொல்லுது. அடுத்து இப்ப எங்களுக்கே படிப்பிக்க வெளிக்கிட்டிருக்கும் தம்பியவை மற்றும் தங்கச்சிமார் அனைவருக்கும் நீண்ட நாட்களின் பின்னர் உங்கள் அன்புக்கும், பாசத்திற்கும், பட்சத்திற்கும், பெருமதிப்புக்கும் உரிய தவறணையான் மீண்டும் வந்திட்டன் என்று அறியப்படுத்திக்கொள்கின்றேன்.

உலகப்படத்தில இந்த நாடு எங்க இருக்கு, இந்த சமுத்திரம் எங்க இருக்கு எண்டு, சமுகக்கல்வி படிப்பிச்ச வாத்தி லொள்ளு பண்ணேக்கையே, ஹெய்ரோவைக்கொண்டுபோய் அவுஸ்ரேலியாவில குறிச்ச நாங்கள், வாத்தி குறிக்கச்சொன்ன நாடுகளில எல்லாம் நிண்டு நிண்டு ஒருமாதிரி, எங்கட குடும்பத்தினர் உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்தம். அதுதான் இந்த இடைவெளி.

மண்ணை விட்டு பிரிஞ்ச சோகங்கள், இங்க வந்தால் 100 மடங்கு ஆகுது. எங்கடா நான் ஆழுதிடுவேனோ என்று ஒரு ஓரமாய்ப்போய்ப்பார்த்து சுருண்டுகொண்டு படத்திருந்தநேரம், பாழாய்ப்போன ரேடியோக்காரன் ஒருவன், ஓ…தென்றலே என் தோழில் சாயவா, தாய் மண்ணின்…என்று போகும் பாட்டை போட்டான் பாருங்கோ உண்மையில அழுதுபோட்டன். முக்கியமாக என்ரை தவறணையை நினைத்து.
இனிமேல் அந்த அற்புதமான கள்ளு எனக்கு கிடைக்காதுபாருங்கோ, ஜொனிவோக்கரும், வற்றும்; எங்களை ஒன்றும் செய்யமுடியாதுபாரங்கோ, அந்த அற்புதமான தெய்வந்த பல்மேறா மில்க் போல எதுவும் கிடையாது.

சரி..விசியத்திற்கு வாறான். கன நாள் இந்த கோதாரில விழுந்த வலைப்பக்கம் நான் எழுதவரவில்லை என்றாலும், பெருமதிப்புக்குரிய இனிய நண்பர்களான , தங்கமுகுந்தன் அண்ணா, அடலேறு அண்ணா, நிலாரசிகள் அண்ணா, ஜனா அண்ணா, கேபிள்கொழுவுற அண்ணா, நம்ம தோஸ்த்து சயந்தன் ஆகியோரின் வலைப்பதிவுகள் மூலம் கருத்துக்கிறுக்குகள் மூலம் எல்லாரையும் என்ட இருப்பை மறந்துபோகமல் இடைக்கிடை வச்சுக்கொண்டுதான் இருந்தனான். இந்த விசியத்தில எனக்கு மாஸ்டர் பிறைன்.

அட இந்த நாசமறுப்பான் யாழ்ப்பாணத்தில நிண்டே அறம்புறமாய் எழுதித்துலைத்தவன் இப்ப வெளிநாட்டில நிக்கிறான் என்வெல்லாம் எழுதப்போறானோ என்று பலபேர் நினைப்பியள் நியாயமும்தான். நான் இனிமேல் நம்மட நிலா ரசிகன் அண்ணாபோல, அடலேறுபோல கட்டுரை, கவிதை எல்லாம் எழுதி, அப்புறம் நம்ம ஜனா அண்ணைபோல ஆராய்ச்சித்தொடர்களை எழுதி, சயந்தன்போல எழுதி பிறைஸ்வாங்கி என்றெல்லாம் திட்டமிட்டிருக்கின்றேன்.
பார்ப்பம் எல்லாம் சுகம்வரும். (ஆளும் தப்பும்)

நான் இந்த இடத்தை வந்து சேர்ந்தவுடன பல்கலைக்கழகத்தில எங்களை ராக் பண்ணின பெடியள் கனக்கபேர், திரிந்தாங்கள், ஓகோ…இப்ப இங்க வந்து சேர்ந்ததிலையும் நான் ஜூனியர்தானே இதற்கும் ராக் பண்ணப்பொறாங்களோ என்று ஒரு கிழமையாய் ஒழிச்சோடித்திரிந்தேன். பிறகு அநியாயம் சொல்லக்கூடாது பெடியங்கள் கனக்க உதவிகள் செய்தாங்கள்.
அது சரி யாழ்ப்பாணத்தில கோல்லீவ் என்ன விலை ஜனா அண்ணை?

என்ன திடீர் என்று வந்த இடமாற்றம் மனசுக்க என்மோ செய்து. சில பல பிரிவுத்துயர்கள் நெஞ்சை புழியுது. அங்கை அவளவைக்கு புழியுதோ இல்லை புரியுதோ தெரியாது. சரி..இனி என்ன எல்லாரையும் அடிக்கடி வலைப்பதிவுகளிலும், முகநூல்லையும் சந்திக்கிறன்.
Till than Take Care Bye.. Bye (அதுதான் இங்கிலீசு பேசுற நாட்டுக்கு வந்திட்டமில்லை)