Friday, July 30, 2010

பழசுகள் பறஞ்ச பழைய கதைகள்.II

பொதுவா ராவழியில கனத்த இருட்டுக்க போகேக்க கனக்கபேருக்கு ஓட்டமட்டிக்கா பாட்டுவரும், இன்னும் சிலபேருக்கு தூசணங்கள் எல்லாம் வாய்க்க வரும், ஏன் எண்டு நினைக்கிறியள்? பயம்தான்.
எங்கட பழசுகளும் அப்படித்தானாம். இந்த விசியத்தில ஆளையாள் நக்கல் அடிப்பினம். அப்படி அவை வரரேக்க கனக்க விளையாட்டுக்கள் நடக்குமாம்.
ஒருக்கா சித்தம்பலத்தாரும், கனகரும் இப்படி கச்சேரியும் பாhத்துப்போட்டு, அங்க ஒரு சினேகிதர் வீட்டில இரவு களியாண விருந்திலையும் கலந்துகொண்டுபோட்டு, கனக்க பலகாரங்களும் அவையள் கட்டி கொடுக்க வாங்கி பின்னால கட்டிக்கொண்டு வந்தவையாம். அப்ப கோம்பயன் மடத்தடி சுடலை வரேக்க அப்புமாருக்கு பாட்டுகளும் தேவாரங்களும் வாய்க்க வந்திச்சாம்.
இருந்தாப்போல கண்டுக்குட்டி அளவில பெரிய கறுப்பு நாயொன்று விட்டு திரத்திச்சாம். ஆனால் குலைக்கவில்லையாம். சித்தம்பலத்தார் டேய்..இது நாயில்லை வேற விளையாட்டு பின்னால திரும்பி பார்க்காமல் மிதியடா என்று கத்த இரண்டு பேரும் மிதிக்க மிதிக்க சைக்கிள் ஸ்பீட்டாய் போக காணலையாம். பின்னால மாட்டுத்தாள் பாக்கில இருந்த பலகாரத்தை கொற கொற என்று எலி அரித்சாப்போல சத்தம் வந்திச்சாம்.

அங்கால இருக்கிற வைரவர் கோவில்ல சைக்கிள்ள இருந்து இறங்கி. கோவில் கிணத்தடியில கை கால் அலம்பிப்போட்டு, திருநூத்தை எடுத்து நெத்தி முழுசாய்ப்பூசிப்போட்டு பார்த்தா மாட்டுத்தாள் பை கட்டின படி அப்படியே இருக்காம். இந்தாடா கனகு, அந்த சவத்தை அப்படியே தூக்கி எறிஞ்சுபோட்டு வா கண்டியோ! என்று சித்தம்பலத்தார் சொல்ல அங்கயே தூக்கி எறிஞ்சுபோட்டு வந்திசிசனமாம்.
இப்படி அப்புவவை சொன்ன பேய்க்கதைகள் இன்னும் கனக்க. அரைவாசி புளுகு.

முற்ற ஒரு கதை சொன்னவை கண்டியளோ..அப்ப 1965 அப்படி, நடந்த கதை ஒன்று இது பற்றி அப்போதைய பேப்பர்களில எல்லாம் பரவலா கதை அடிப்பட்டதாம்.
விசியம் என்ன எண்டால் அதுக்கு பெயர் “மர்மமனிதன்”.
அந்த நேரத்தில இரவு வழிய கதவு பூட்டினபடிதான் இருக்குமாம், ஓடுகீடு பிரித்த தடையங்களும் இருக்காதாம், ஆனால் தொடர்ச்சியாக கனக்க வீடுவழிய மர்ம ஆசாமி ஒருத்தன், உலாவிறதை கனக்கபேர் கண்டுபோட்டினமாம். கதை விறு விறு எண்டு பரவி சனங்களுக்கு ராத்திரியில பீதி வந்து பேதியாப்போச்சாம்.
வாசலில தண்ணி வைச்சும், தலைமாட்டுக்க தண்ணி வச்சும்தானாம் சனங்கள் படுக்குங்களாம். இங்க மர்ம மனிதன், அங்க மர்ம மனிதன் எண்டு சனம் அல்லோல கல்லோலப்பட கடைசியில பொலிஸ் காரங்கள், இரவு முழுக்க பல ஏரியாக்களில நிண்டு, ஒரு மாதிரி அந்த மர்ம மனிதனை பிடிச்சு போட்டாங்களாம்.
ஆள் ஒன்றும் மர்ம மனிசன் இல்லை சித்தசுவாதீனம் இல்லாத ஆள் ஒன்றுதானாம்.

உப்புடி பழசுகளின்ட கதையள் அந்த மாதிரி. இதுக்குள்ள அப்போதைய ஏரியா சண்டியர்கள், சண்டிச்சிகள் கதைகள் வேற கதைப்பினம். கீரிமலைப்பக்கம் இருந்த அப்போதைய சௌர்ணாக்கா வியாழி, ஆரியகுளம் மணியன், பேந்துவந்த கொட்டடி போயா என்று கனக்க சண்டியர்கள் பற்றியெல்லாம் கதைப்பினம். இதில போயா அண்ணன்ட கதை எனக்கு ரொம்ப பிடிக்கும் கண்டியளோ.
கொட்டடிக்குள்ள ஒரு சின்ன அசைவு எண்டாலும் போயாண்ணைக்கு தெரிந்துவிடுமாம். எவனும் சண்டித்தனம் பண்ணிக்கொண்டு கொட்டடிக்குள்ள வர ஏலாதாம் கண்டியளோ! ஆனால் ஆள் ஒரு கறுத்த வாடலாம். சறமும் கட்டி நல்ல மாட்டின் சேட் புள்கையா விட்டுத்தானாம் திரிவார்.

1983 ற்கு பிறகு போராட்ட இயக்கங்கள் வெளிக்கிட்டதால சண்டியன்மார் அடங்கிட்டினமாம். சில பேர் அடங்காமல் போஸ்டில தூங்கினதும் இருக்காம்.
போயா அண்ணை அப்படி அடங்காத ஒரு சிங்கமாத்தானாம் திரிஞ்சார்.
தனக்கு வெடி விழப்போகுது எண்டு, தெரிஞ்சு வேண்டும் எண்டே பொலிஸிலை மாட்டுப்பட்டவராம். ஆனா என்ன? போயாண்ணையை கோட்டுக்கு கொண்டுபோக கோட்டுக்கு லோயர்கள் இரண்டுபேர் வந்து. சரமாரியா போயாண்ணைமேல சுட்டுவிட்டு ஓடிவிட்டார்களாம். லோயர்மார் போல வந்தது ஒரு இயக்க காரங்கள்தானாம். பிறகு போயாண்ணை இரத்த வெள்ளத்துக்க கிடந்தாலும் சாகவில்லை, ஒருமாதிரி உயிரை கையில பிடிச்சுக்கொண்டு, யாழ்ப்பாணம் ஆசுப்பத்திரிக்கு கொண்டு போய் ஒரு மாதிரி உயிர் தப்பி. பிறகு வோட்டில இருந்திருக்கிறார்.

பிறகு நடந்த சங்கதியை பாருங்கோவன். அண்ணையை ரெகுலர் செக்கப் செய்யிற டாக்குத்தர் மார் வந்துட்டுபோக வேறு இரண்டு இளம் வைத்தியர்மார் வந்து போயாண்ணையை செக்கப் பண்ணிப்போட்டு, என்ன மாதிரி ஐயா! நோ எதும் இருக்குதோ? ஒழுங்கா சாப்பிடுறியளோ என்றெல்லாம் விசாரித்திருக்கினம், போயாண்ணையும், ஓம் ராசா நான் தப்பி வந்திண்டன் எண்டு நினைக்கிறன், இப்ப ஒழுங்கா சாப்பிடுறன் என்றிருக்கின்றார். பிறகு பட்பட் என்று சத்தம். போயாண்ணை நிரந்தரமாகவே போய்ச்சேர்ந்திட்டாராம் கண்டியளோ! லோயர் மாரிட்ட தப்பி பிறகு டாக்குத்தர் மாரிட்ட போடுபட்டுட்டார் போயாண்ணை.

இப்படி இந்த பழசுகள் சொல்லுற கதைகள்ல இருந்துதான் நான் பிறக்கிறதுக்கு முந்தி நடந்த கனக்க விசியங்களை நான் அறிஞ்சு கொண்டனான் பாருங்கோ.
இப்ப அவேன்ட குறூப்புக்கை கனகர் மட்டும்தான் இன்னும் ஊசலாடிக்கொண்டு திரியுறார். முற்ற நண்பர்கள் எல்லாம் அடுத்த பிறப்பும் எடுத்திருப்பினம்.
எல்லாருடைய செத்தவீட்டையும் சீரும் சிறப்புமாய் முடித்து, அந்தரட்டியீறாய் நின்று முடித்து குடுத்ததிலை எனக்கு திருப்திதான். ஆனால் என்ன ஒரு ஒற்றுமை எண்டால் என்ட நண்பர்களாக இருந்த ஆறு பேரிலையும் ஒருவரும், நோய் வந்து இழுத்துக்கிழுத்து பிள்ளையள் பேரப்பிள்ளையளுக்கு கஸ்டம் கொடுத்து சாகவில்லை. திடீர் என்றுதான் போய்ச் சேர்ந்ததுகள் புண்ணிய சீவனுகள்.
முதல்ல சித்தம்பலத்தார் சாகேக்க நான் தாங்கேலாம அழுதனான் கண்டனியளோ!
பிறகு யோகர், சாமியர், வல்லிபுரம், பொன்னுத்துரையர் எண்டு போகேக்க நான் அழுது அவர்களை கரைச்சல் கொடுக்காம அவர்கள் எப்போதும் என்னை பார்க்கிறதுபோல சந்தோசமாகவே அனுப்பி வைச்சிருக்கிறன்.

என்னதான் முசுப்பாத்தியா இதையெல்லாம் அவர்களின்ட கதைகளாய் எழுதினாலும், இப்ப அவையை நினைத்தாலும் நெஞ்சம் கனக்குது கண்டியளோ.
நான் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பெயில் விட்டுவிட்டு, அம்மாட்டை அடிவாங்கிப்போட்டு அழுதுகொண்டு ரோட்டால ஓடேக்க பிடிச்சு வச்சு, மடத்தல் ரஸ்க் வாங்கித்தந்து, ஆறுதல் தந்தது அவையின்ட மடிதான், பிறகு வளர்ந்த காலங்களில, டேய் அங்க ரவுண்டப்பாம் போகாத, இங்க கிளைமோர் வெடிச்சிட்டாம் போகாத என்று தகவல் சொல்லி என்னை பாதுகாத்தது அதுகளின்ர கைகள்தான், நான் கம்பசுக்கு எடுபட்டதும் பெற்றோரைவிட சந்தோசப்பட்டதும் அதுகள்தான்,
நாலுதரம் காதல்ல தோல்வியுற்றவேளைகளில ஆறுதல் சொல்லி சிரிக்கவைத்து ஐந்தாவதுக்கு அத்திவாரம் போட்டுவிட்டதுகளும் அதுகள்தான்.
என்ன செய்வது..அவையின்ட நினைவுகளும், கதைகளும் எனக்கு அவையள்ட வயது வரும்போதும் மறக்காது பாரங்கோ.

9 comments:

Unknown said...

Realy Superb Dilan.

Mathu said...

Nice Post in Jaffna Tamil. I Like it man.

சயந்தன் said...

நகைச்சுவையான ஒரு பதிவு என்றாலும். கடைசியில் அந்தப் பெரியவர்கள் பற்றி கூறி இதயத்தை நனைத்துவிட்டீர்களே டிலான்.

Jana said...

கடந்த கால யாழ்ப்பாணத்தை பெரியவர்களின் வாய்மூல தகவல்களில் இருந்து தந்திருந்தீர்கள். பல விடயங்களை அறிந்துகொண்டேன். குறிப்பாக வியாழி, போயா பற்றி எல்லாம் கேள்விப்பட்டிருக்கின்றேன். மண் மணம் கமளும் பதிவு.

Unknown said...

pppகடைசியில் அந்தப் பெரியவர்கள் பற்றி கூறி இதயத்தை நனைத்துவிட்டீர்களே டிலான்qqq

Athey..athey

KANA VARO said...

அன்று சந்தித்த போது ஜெனா அண்ணா சொன்னார், தவறணை காரனை திருப்ப கடை நடத்த கூட்டிக்கொண்டு வந்தாச்சு எண்டு.

பதிவு யாழ்ப்பாண பேச்சு வழக்கில் அருமை. மானிப்பாயில 'துரத்துரத்தை' திரத்துறது' எண்டோ சொல்லுவினம்.?

தவறணைக்கு அடிக்கடி வருவன். கள்ளுக்குடிக்க இல்லையப்பா...

ம.தி.சுதா said...

old is gold என்பது சரிதானே. கடைசியில் மனதை தொட்டுட்டீங்க

Kiruthigan said...

ஜனாண்ண சொல்லி தான் வந்தன் நல்லாருக்கு...
இனி இடிக்கடி வருவன் கண்டியளே...

வடலியூரான் said...

நல்லாத் தான் இருந்துது உங்களின்ர "பழசுகளின்ரை கதையள்" இன்னும் எழுதுங்கோ