Saturday, November 14, 2009

ஞாபகம் வருதே…

எங்களைவிட்டு தூரப்போன சில விசியங்களை இண்டைக்கு உங்களோடை கதைக்கலாம் என்று நான் நினைக்கிறன் கண்டியளோ. அன்று நாங்கள் அனுபவித்த இந்த விசியங்களை நாகரீகத்தின், வளர்ச்சி ஜெனேரசன் கப், இப்படி பல வந்து எங்கட பிள்ளைகள் அனுபவிப்பதை தடுத்துப்போட்டு கண்டியளோ.
இன்று இந்த விசியங்களை நாங்கள் எங்களுக்கை கதைக்கேக்கயே சந்தோசமாகத்தான் இருக்கு பாருங்கோ.

நாங்கள் முந்தி பல விதமான அடுப்புகளை பாவித்தனாங்கள்தானே. முக்கியமாக விறகு அடுப்புகள், மண் சட்டியை வாங்கி பிறகு அதையும் நெருப்புக்கொழுத்தி சுட்டு, அதில கறிகாச்சி சாப்பிட்டால் அதின்ட சுவைக்கு முன்னால உலகத்தில எந்த அமுதசுரபியை கொண்டு வந்து வைத்தாலும் முன்னுக்கு நிற்க ஏலாது கண்டியளோ.
அப்படி நாங்கள் பாவித்த பழைய சமையல் உபகரணங்களில தூள் அடுப்பும் ஒண்டு. முந்தி மரக்காலைகளில, போய் மரஞ்சீவிய தூள்களை எடுத்துக்கொண்டுவந்து, பழைய பூவாளியிண்ட சைசில உள்ள தகரத்தையோ, இல்லாட்டி, பெரிய தகர டப்பாவையோ, எடுத்து. விறகு உள்ள விடுவதற்கு ஏற்றாப்போல கீழ் பகுதியில ஓரளவு ஓட்டை போட்டு, பெரிய சாராய போத்திலை நடுவுக்கை வைத்து, மரத்தூளை டப்பாவிலை கொட்டி, போத்தில சுத்தி இறுக்கி அடைத்து, விறகு ஓட்டையில தூளை நீங்கி கொஞ்சம் விறகை தீமூட்டி, இந்த மரத்தூள் அடுப்பு எரித்தகாலம் ஒன்று இருந்தது கண்டியளோ. நல்லா நின்றும் எரியும் அது.
இப்பத்த பெடியளுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க நியாயமில்லை.

அதேபோல, முந்தி ஒரு வீட்டிலை குறைஞ்சது மூண்டு மாமரமாவது நிக்கும் பாருங்கோ, அம்பலவி, கறுத்த கொழும்பான், சேலம், விளாட், செம்பாடு, வெள்ளைக்கொழும்பான், கிளிச்சொண்டு, பாண்டி என்று பலவகை மாமரங்கள் அப்ப நின்றது. எல்லாம் பெரும்பாலும் ஒரே சீசனிலதான் காய்க்கும் கண்டியளோ.
சும்மா சிலிர்த்துப்பூக்கும். பிறகு பிஞ்சுபிடித்து முத்தின உடன, கிறு கிறு என்று அணில்பிள்ளை வந்து கடிக்கிறதுக்கு முன்னம், அவருக்கும் கொஞ்சம் விட்டுவிட்டு மிச்சத்தை, முத்தல் மாங்காய்களை, கீழே விழாமல் புடுங்கி எடுத்து வைத்திருப்பினம்.
பிறகு, முற்றத்தில சின்ன கிடங்கு ஒன்று வெட்டி, அதுக்குள்ள, வைக்கோல், உமி எல்லாம்போட்டு, அதுக்குள்ள இந்த முத்தின மாங்காய்களை வைத்து, தகரத்தால மூடி, மேல மண்ணைப்போட்டு, அதுக்குள்ள போகக்கூடியதாக சின்ன ஓட்டைபோட்டு, அந்த ஓட்டைக்குள்ளால உள்ளுக்கு போகத்தக்கனமாதிரி புகையடிப்பினம். இரண்டு, மூன்று நாளில சும்மா, தங்க நிறத்தில பழங்கள் எல்லாம் பழுத்து. நல்ல மாம்பழ மணத்தோட இருக்கும் கண்டியளோ. பிறகென்ன எடுத்து விளையாடவேண்டியதுதானே.

முந்தி வாற இனிப்புகள் உங்களுக்கு ஞாபகம் இருக்கே? தோடம்பழ இனிப்பு, புளி இனிப்பு, கட்டியாக கலர் கலர்ராக கோடுபோட்ட இனிப்பு, இப்பத்த பெப்பமென்போல கலர்கலராக நல்ல ஒரு ருசியாக இருந்த இனிப்பு, மினக்கெட்டு சாப்பிட புளுட்டோ என்று ஒரு இனிப்பு, பல்லிமுட்டை இனிப்பு, பொரிவிளாங்காய், பிறகு ரோஸ்கலரில பொரிபொரியாக இருக்கும் ஒரு இனிப்பு, ஒரேஞ்ச் இனிப்பு, பிறகு அப்பளம் மாதிரி கலர்கலராக இருக்கும் ஒரு இனிப்பு, இப்படி எத்தனை இனிப்புகள். அதுகளின்ட சுவையே தனிசுவை கண்டியளோ.
முந்தி அப்பாவிண்ட பொக்கேட்டுக்கை இரண்டு ரூபாவை அபேஸ் பண்ணிட்டு, கடைக்கு போனா, அங்கை பெரிய வயித்தோடை மாப்பிள்ளைக்கோடன் சாறம் உடுத்துக்கொண்டு கடைக்கார மாமா இருப்பார், ரெண்டு ரூபாவை நீட்டிவிட்டு. உள்ள இனிப்புகள் எல்லாத்தையும் காட்டுவம். பாவம் மனிசன், சின்னனுகள் வந்து கேட்குதுகள் என்று அள்ளி தருவார், பிறகென்ன அத்தனையையும் அவசரமாக வயித்துக்க அனுப்பி போட்டுத்தானே வீட்டபோவம்.
இப்ப வாற ரொபிகள்ல ஏதாவது அந்த இனிப்புகளின்ட ருசிக்கு இருக்குதோ சொல்லுங்கோ..

இப்படி நினைத்து நினைத்து எழுதப்போனால் நிறைய விசியங்கள் வரும் கண்டியளோ, எழுதேக்கயே எனக்கும் பழைய ஏக்கங்கள்தான் மிஞ்சும்பாருங்கோ, போனபருவம் மீண்டும் வராதுதான், அனால் அன்றைய பழைய சுகங்கள் இந்த நாகரீக உலகத்திலை இல்லை கண்டியளோ. இப்ப வெறும் பகட்டும் டாம்பீகமும்தான் இருக்குதுதானே ஒழிய யாராவது மனசார அண்டைக்குப்போல சந்தோசமாக இருக்கிறம் என்று சொல்லமாட்டினம் பாருங்கோ.
இப்படி சின்னசின்ன சிறைய விசியங்களை நாங்கள் துலைத்துப்போட்டம் பாருங்கோ..
இதையெல்லாம் நினைத்து வேணும் எண்டால் பெரிதாக ஒரு பெருமூச்சுவிடலாம்! அவ்வளவுதான்.

Friday, November 13, 2009

தவறணையில க்கியூவரிசை..

பேரன்பு மிக்க பெரியோர்களே, தாய்மார்களே, அண்ணன் தம்பிமாரே, அக்கா தங்கைமாரே.. வணக்கத்துடன் நான் சொல்லிக்கொள்வது என்வென்றால்..!!
இன்று தவறணையின்ட தலையங்கத்தை பார்த்திருப்பியள், என்னடா இவன் வழமையாக அலட்டுறமாதிரி தவறணையில குடிக்க க்யூவரிசை நிற்குது என்று எழுதுறான்போல என்று நினைத்தால், அங்கதான் நீங்க பிழைவிடுறியள்.
தலையங்கத்திலதான் நான் சொல்ல வந்த விசியம் அடங்கியிக்கு பாருங்கோ..
இன்னும் விளங்காட்டி இந்த “க்கியூவரிசை” தானுங்கோ அது!!

எங்கட ஆக்களில ஒரு பழக்கம் ஒன்று இருக்கு பாருங்கோ, கதைக்கேக்ககூட பல ரெட்டைபதிவுகளை அறியாமலே செய்துபோடுவினம். வித்தியாசமாக ஒரு கதை காதுவழிய வந்தால் உடன அதை திருவாய்களால் மொழிய வெளிக்கிட்டுப்போடுவினம்.
அட நாங்கள் கதைக்கிறது சரியோ, தப்போ என்றுகூட கணக்கில எடுக்கிறதில்லை, தங்கட பாட்டுக்கு அடுக்கிக்கொண்டே போறது.
இப்படி எங்கட கதைகளில பெரும்பாலும், ஒரே அர்த்தத்துடன் இங்கிலீசையும் தமிழிழையும் சேர்த்து கதைக்கும் பழக்கம் நான் உட்பட உங்களில பலபேருக்கு இருக்கும் கண்டியளோ.. கொஞ்ச சொல்லுகளை எடுத்துவிடுறன், நீங்கள் சொல்லுறனீயளோ இல்லையோ என்று ஒருக்கா சொல்லிப்பாருங்கோவன்..

பின்றிவேஸ்
கச்பிடி
நடுசென்ரர்
போஸ்ட்கட்டை
லைட்டுவெளிச்சம்
ஷோக்காட்டுறார்
க்கியூவரிசை
பொக்ஸ்பெட்டி
சவப்பெட்டிக் கொபின்
மதர்அம்மா
இப்படி அடக்கிக்கொண்டே போகலாம்.

இது இப்படி என்டால் இன்னும் ஒரு பகிடி என்னெண்டா, எங்கட சனம் ஒருபொருளாக எது முதலில வந்து “பேமஸ்” ஆகுதோ அதிண்டை பெயரைத்தான் பிறகுவாற எல்லா பிராண்டுக்கும் சொல்லிக்கொண்டே இருக்குங்கள்.
கண்டோஸ் எண்டால் உலகத்தில் இருக்கிற அத்தினை சொக்குலேட்டுக்கும் கண்டோஸ் தான் பெயர் கண்டியளோ! வெளிநாட்டில இருந்து யாராவது வந்தால் அதுகளிட்டயும்போய் “கண்டோஸ்” கொண்டுவந்தனியளோ என்றுதான் கேக்குங்கள் இந்த பேச்சனங்கள்.
அதுபோல சோடா, செல்டல், பாட்டா, கோட்டெக்ஸ், மக்கீ என்று சில பெயர்கள் இந்த சனங்களின்ர மனதில பதிஞ்சுபோட்டுது கண்டியளோ. அதுகளை மாத்துறது வலுங்கஸ்டம்.

அதுபோல இன்னொரு முக்கிமான விசியம் இங்க யாழ்ப்பாணத்தில இந்த லெமினேட் வேலைகளை செய்ய “கிளீன்கட்” எண்ட கடை ஒன்று போட்டு நல்ல பேமஸாக போனது ஒரு காலத்தில கண்டியளோ. ஆனா இண்டைக்கும் சில பெருசுகள், தங்கட ஐலேண்டிக்காட்டை லெமினேட்பண்ண கொண்டுவந்து கேட்குங்கள் எப்படி தெரியுமே??? “தம்பி இதை ஒருக்கா கிளின்கட் அடிச்சு தாறியளே எண்டுதான்”
இப்படி கதைக்கிற விசியங்களில் கனக்க விளையாட்டு இருக்கு கண்டியளோ.

சரி..இண்டைக்கு ஐப்பசி வெள்ளி கடைசி நாளுங்கோ. பின்னேரம் நல்லூர் சிவன்கோவிலில இயம சங்காரம் நடக்கும். முந்தித்தொடக்கம் இயமன் வந்து, சிவகுமாருக்கு.. இல்லை இல்லை, மார்க்கண்டேயருக்கு கயிறுவீசி சிவலிங்கத்துக்குள்ள இருந்து சிவபெருமான் வந்து இயமனை உதைய, இயமன் அப்படியே பின்னால கவுண்டு விழுவதுமட்டும் நின்று பார்ப்பன். பிறகு அன்னவாகனத்தில பிரம்மா வந்து சிவனோட நெகோஷிகேஸன் பண்ணி அவரை உயிர்ப்பித்த உடன, அந்த இடத்தில நிற்காமல் ஓடிடுவன் கண்டியளோ..
எதுக்கும் இயமன் என்னை பார்த்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கைதான்.

Wednesday, November 11, 2009

பிடித்த பத்து


தவறணைக்கு வந்து கதைச்சால் பிரச்சனை வாறதுகளில ஒன்று இந்த பிடிக்கும், பிடிக்காது என்ற விசியம். ஒருதர் ஒன்றை பிடிக்காது என்று சொல்ல, ஏன் மச்சான் அப்படி சொல்லறாய்? என்று கேட்டு ஆரம்பித்த தொடங்கி பேந்து, தவறணை முகடுகள் பிரிக்கப்பட்ட பல கதைகள் இருக்குது பாருங்கோ.
இருந்தாலும் ஜனா அண்ணை, அன்போட அழைக்கேக்க, அதை செய்துமுடித்துப்போட்டுத்தானே மற்றவேலையை பார்க்கோணும்.
என்ன பிரச்சனை எண்டாலும் பறவாய் இல்லை.

நடிகர்களில எனக்கு சிவாஜிகணேசன்தான் பிடிக்கும், பிடிக்காத நடிகர் விஜய்தான்.

நடிகைகளில மனோரமாதான் பிடிக்குமுங்கோ உண்மையாலும். பிடிக்காத நடிகை சிரேயா..இவவிண்ட மியாவ். மியாவ் பூனை ஆட்டத்தை பார்த்தே முடிவு பண்ணிட்டன்.

பிடிச்ச எழுத்தாளர் அகிலன், பிடிக்காத எழுத்தாளர் துக்லக் சோ

பிடிச்ச புலவர் ஓளவையார்தானுங்கோ, பிடிக்காத புலவர் ஒட்டக்கூத்தன்.

பிடிச்ச நிறம் எப்பவும் எனக்கு வெள்ளைதான் (நான் என்ன பாலா கள்ளா?) பிடிக்காத நிறம் நாவல்.

பிடிச்ச பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்தான், சகிக்காத பாடகர் நான்தான்.

பிடிச்ச கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுதந்தரம், பிடிக்காத கவிஞர் “நான் அடிச்சா தாங்கமாட்டாய்” போன்ற அருமையான பாட்டுக்களை எழுதுறவைகள்;.

பிடிச்ச இடம் நூலகம், பிடிக்காத இடங்கள், புதுசா முளைக்கிற மனிதக்கடவுளுகளை கும்புடுறத்துக்கு கட்டப்படும் கட்டடங்கள்.

பிடிச்ச குணம் அன்பு, பிடியாத குணம் அகங்காரம்.

பேச்சாளர்களில பேராசிரியர் பெரியார்தாசனைத்தான் ரொம்ப பிடிக்கும்.
பிடிக்காத பேச்சாளர் என்றால் கம்பவால்தான்.

இந்த பிடிச்ச பத்துக்களும், பிடிக்காத பத்துக்களும் காணும் எண்டு நினைக்கிறன்.
இதை இன்னார்தான் தொடருங்கோ என்று சொல்லமாட்டன். விரும்பினவையள் தொடர்ந்து உங்கட விருப்பு வெறுப்புக்களை எழுதுங்கோ, ஆனா நல்லா சைக்கோலொஜி தெரிஞ்சவன் எவனாவது எல்லாத்தையும் வாசித்தான் என்டா, ஒவ்வொருத்தரை பற்றியும் பக்காவா சொல்லிப்போடுவான் கண்டியளோ…

Monday, November 9, 2009

உதயன் பத்திரிகையின் முக்கிமானதொரு ஆசிரியர் தலையங்கம்.


தேச வழமைச் சட்டத்துக்குத் திருத்தம் அந்த மக்களிடமிருந்து வரவேண்டும்

இலங்கைத் தீவில் சட்டம் இயற்றும் அதிகாரம் இலங்கை யின் நாடாளுமன்றத்துக்கே உரியது. பராதீனப்படுத்த முடி யாத நாடாளுமன்ற உரிமை அது.
ஆனால் இலங்கையில் தனி ஒரு குழுமத்தின் அல்லது ஓர் இனத்தின் நலன் சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பில் அந்த இனத்தின் அல்லது குழுமத்தின் கலந்தாய்வோ, பங்களிப்போ இன்றி நாடாளுமன்றம் தான்தோன்றித்தனமாக சட்டங்களை நிறைவேற்றி நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது. அப்படிச் செய்வது நீதியற்றது; முறையற்றது; ஒழுங்கற்றது.

இலங்கையின் சிறுபான்மை இனத்தவர்களான தமிழர் களைப் பொறுத்தவரை அத்தகைய முறையற்ற சட்டங்களை சுதந்திர இலங்கையின் நாடாளுமன்றம் அதன் தொடக்க காலம் தொட்டே நிறைவேற்றி வந்திருக்கின்றது என்பதுதான் அவர் களின் பட்டறிவு. இன விரோதக் குரோதம் மற்றும் காழ்ப் புணர்வின் பெறுபேறுகளை அரங்கேற்றும் அரங்கமாக நாடாளு மன்றத்தைப் பயன்படுத்திய பேரினவாதம், அந்தச் சட்டமியற் றும் அதிகாரத்தைத் தன் கையில் வைத்துக்கொண்டு எதேச் சாதிகாரமாக நடந்துகொண்டது; நடந்துகொண்டும் இருக் கின்றது. அதன் விளைவாகத்தான் அறுவடையாகத்தான் மிகக் கோரமான அழிவுகளைத் தந்த இந்த உள்நாட்டு யுத்தத்தை இலங்கைத்தீவு காணவேண்டிய துர்ப்பாக்கியம் ஏற் பட்டது. பல்லாயிரம் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன; இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடியது. எங்கும் பேரழிவு. நாசம். கொடூரம்.
இப்போதும், இந்த யுத்தத்தில் வென்ற பின்னரும் கூட, மேலாதிக்க வெறியும் மேலாண்மைத் திமிரும் ஆதிக்கத் தரப் புக்கு அடங்குவதாக இல்லை. அடிமைப்படுத்தல் கொடூரம் நீங்குவதாக இல்லை.

அடக்கி ஒடுக்கப்பட்ட பாதிக்கப்பட்ட சிறுபான்மையினரான தமிழர்களின் நீதியான அபிலாஷைகளைக் கவனத் தில் எடுப்பார் எவருமில்லை. அவர்களின் நியாயமான ஆதங் கங்களை செவிமடுப்பார் யாருமில்லை.
இந்த நிலையில்தான், இலங்கையின் வடக்குத் தமிழர் களின் பாரம்பரிய சட்டமான "தேச வழமையை" அரசு மறு சீரமைக்கப் போகின்றது என்ற செய்தி வெளியாகியிருக் கின்றது.
வடக்குத் தமிழர் தாயகத்தில் பல நூற்றாண்டு காலமாகக் கைக்கொள்ளப்பட்டு வரும் வழக்காறுகள், சம்பிரதாயங்கள், பழக்க முறைகள், பண்பாட்டுக் கோலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதே தேச வழமைச் சட்டமாகும். வட பகுதியில் கணிசமான பிரதேசத்தில் காலாதி காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த இந்த நடைமுறையை 1706 இல் ஒல்லாந்தர்கள் முத லில் கட்டுக்கோப்பான ஒழுங்கு விதிகளாகக் கட்டமைத்தனர்.

பின்னர் 1806 இல் பிரிட்டிஷ் காலனித்துவ அரசு அதற்கு சட்ட அந்தஸ்து அளித்தது. 1869 இலும், 1911 இலும் சில புதிய ஏற்பாடுகள், ஒழுங்கமைப்புகள் அதற்குப் புகுத்தப்பட்டன.
1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் வட பகுதி மக்களுக்கான சட்ட முறைமையாக அது ஒப்புக் கொள் ளப்பட்டுத் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
மாறிவரும் உலகில், நவீன சிந்தனைப் போக்குகளுக்கு ஏற்ப சட்டங்களும் மாற்றமடைய வேண்டியவைதான். பழைமை பேணல் என்ற பெயரில் நாம் பத்தாம் பசலித்தனமாக நடந்து கொள்ள முடியாது. தேவைக்கு ஏற்ப சட்டங்களில் நீக்கமும் சேர்த்தலும் தவிர்க்க முடியாதவையே.

அந்தவகையில் தேச வழமைச் சட்டத்திலும் சில பின் னடைவுகள் இருக்கின்றமை சட்ட அறிஞர்களாலும், நீதித் துறைசார் நிபுணர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டே வந்துள்ளது. குறிப்பாக சொத்துரிமைகள் தொடர்பில் பெண்களுக்கு உள்ள பாதிப்புகள் குறித்து விமர்சிக்கப்பட்டே வருகின்றது.
காலத்தின் தேவை கருதி, நவீன உலகப் போக்கில் பெண் களின் சமவுரிமை பற்றிய உறுதிப்பாட்டின் அடிப்படையில், இச்சட்டங்களில் மாற்றம் செய்யப்படவேண்டியமை தவிர்க்க முடியாததாக உள்ளது என்பது ஏற்கத்தக்கதே.
ஆனால், அந்த மாற்றங்களை எத்தகைய வழிமுறைகள் ஊடாகச் செய்வது, அது விடயம் தொடர்பில் கைக்கொள்ளப் படவேண்டிய மார்க்கம் யாது என்பவையெல்லாம் ஆழ்ந்து சிந்திக்கப்படவேண்டியனவாகும்.

இந்தத் தேசவழமைச் சட்டம் வடக்கு இலங்கையைப் பூர் வீகமாகவும், பாரம்பரியமாகவும் கொண்ட விசேட மக்கள் கூட்டத்துக்கென சிறப்பாகவும், விசேடமாகவும், தனித்துவ மாகவும் கைக்கொள்ளப்படும் ஒரு சட்ட ஏற்பாடாகும்.
வடக்கு இலங்கையைப் பாரம்பரிய தாயகமாகக்கொண்ட தமிழ் இனத்தவர்கள் மத்தியிலே நுட்பமான ஆழமான சட்ட அறிவுகொண்ட மேதைகள் இருக்கின்றார்கள். புத்திஜீவிகள் உள்ளனர். கல்விமான்கள் அலங்கரிக்கின்றார் கள். தவிரவும் நாடாளுமன்றத்திலும், பிற உள்ளூராட்சி அமைப்புகளிலும் மக்களின் பிரதிநிதிகள் உள்ளனர்.
எனவே, வட பகுதி சமூகத்துக்கு விசேடமாக உரித்தான தேசவழமைச் சட்டத்தை மறுசீரமைக்கும் விடயத்தில் அந்த வட பகுதி சமூகத்தின் பங்களிப்பும், இசைவும், இணக்க முமே மிக முக்கியமானவையும் பிரதானமானவையுமாகும்.

கொழும்பில் இருக்கும் ஒருசிலரை வைத்துக்கொண்டு இந்தக் கைங்கரியத்தை ஒப்பேற்றுவது ஒரு வகையில் வட பகுதித் தமிழர்களின் சிறப்புரிமையைப் பலவீனப்படுத்தி, சிதைக்கும் நடவடிக்கையாகவே அர்த்தப்படுத்தப்படும். கொழும்பின் மேலாதிக்கத்தை மேலாண்மையை வட பகுதித் தமிழர்கள் மீது வல்வந்தமாகத் திணிக்கும் நடவடிக் கையாக அது அமைந்துவிடலாம்.
எனவே, தேச வழமைச் சட்டத்தை மறுசீரமைப்பு செய்வது அவசியம் என்று கருதப்பட்டால், முதலில் அதற்கான வாதப் பிரதிவாத ஆய்வுகளுக்கான களம் வடக்கில் திறக்கப் படவேண்டும். அந்தச் சமூகத்தின் கருத்தை உள்வாங்கி, அதற்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனடிப்படையில் செயற்பட சம்பந்தப்பட்டோர் முன்வரவேண்டும். அதுதான் நியாயம். செய்வார்களா?
அதைவிடுத்து, கொழும்பில் முடிவுசெய்து, யாழ்ப்பாணத் தில் அதைத் திணிப்பது மற்றொரு இன அடக்குமுறை வடிவ மாகிவிடும்.

Sunday, November 8, 2009

ஏன்டாப்பா கடைவைச்சாய்..


புழனிச்சாமி பெத்தவனே
பழஞ்சோறு தின்றவனே
மத்தியானம் ஆகுமுன்னே
தவறணையில் வேலை என்ன?

என்ன பாவம் செய்தாய்
இங்க வந்து சினேகிதன் ஆனாய்.
அடேய் என் தேவாங்கே
உளராமல்த்தான் சொல்லேண்டா

என்ன சொன்னா??
தேப்பன் வளவினிலே
குள்ளுவிக்கத் தொடங்கியாச்சா?
எட்டிப்பார்க்கையில கூட்டம் குவிஞ்சிடுச்சா?

ஐயோ ஐயையோ அடிவயிறு எரியுதடா
தவறணைக்கு போட்டி என்ன?
பேரிழவு வந்ததென்ன?
கள்ளு புளிச்சதென்ன?
நாசமாப்போனதென்ன?

காலையில் பதனியும்
மாலையில் உடன்கள்ளும்
குடிச்சிட்டு போகனும் என்று
நாட்கணக்காய் காத்திருந்தும்
கடைக்கள்ளு கிடைப்பதற்கே
நாலு நாட்கள் ஆகுதிற்போ..

இந்த லட்சணத்தில்
ஏன்டாப்பா கள்ளுவிக்க முடிவெடுத்தாய்?

கிடுகோலை, மண்குந்தே
கோப்புறேசன் கொடுத்தவரம்
பாடையில போவானே
நான் காசுக்கு எங்கபோக?

காசுவேண்டும் என்றால்
ரொரன்டோக்கு கோல்வேணடும்
கோல்போட வேண்டும் என்றால்
றீச்சாச்சு பண்ணவேண்டும்

மூத்தமகன் லாச்சப்பல்
இளையமகன் விம்பிலி
இந்த லட்சனத்தில்
என்பாடோ பெரும்பாடு

தவறணைக்கு வந்தவுடன்
முட்டி கானில் ஊத்தமுன்னர்
கொண்டுவந்த முழுக்கள்ளும்
கொண்டாட்டமா குடித்துவந்தேன்

காலையில ஒரு போத்தல்
மதியத்தில் 2 போத்தல்
மாலையில 3 போத்தல் என்ற ஓடர் புரியலையோ?

கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வருவது
ஒன்றும் புதுசில்லை உலகத்தில் உள்ளதுதான்!
கைநிறைய காசிருக்கும் போது இந்த
பாதகத்து வளவுக்கடை திறக்குதென்றா
பேசாமல் இருந்திருப்பன்

ஐந்துகள்ளு போத்திலுக்கே
ஐந்து தரம் மனிசியிடம் அடிவாங்கி
கஸ்டப்பட்டு குடிக்கேக்க
இன்னும் ஒரு கடை வந்தா
குத்தாம என்னபண்ண?

ஊரினில இன்னும் ஒரு
குள்ளுக்கடை வந்தது செய்தியானா
இளையபெட்டை தடுப்பாளே
அடுத்தவக முறைப்பாக
இந்த ராத்திரிக்கு இராத்திரியே
ரகசியமா கடையடைத்து

நாளைக்கே பின்னால எடுத்துவை
யாருக்கும் தெரியாமல்.
என் ரோட்டுவழி போகையில வீட்டடியில் நிற்காதே
அடேய் உன் புதுக்கடை பற்றி
என் வீட்டு நாய்க்கும் சொல்லாதே!

(அட எங்கயோ படித்த கவிதையின் தொனி என்டுதானே யோசிக்கிறியள். யூ ஆர் கரக்ட். வடகப்பட்டி கவிஞரின் “ஏன்டியம்மா குத்தவச்சா” கவிதையின் உள்ட்டாதானுங்கோ இது)

Friday, November 6, 2009

ஐயோ..இந்த முறையும் “நிஷாவோ”?


அண்ணை இந்தப்பக்கம் சரியான மழை அண்ணை. அங்காலப்பக்கங்களில எப்படி என்று தெரியாது. போனமுறையும், ஆகாயம் திறந்து கண்டறியாத இந்த “நிஷா” வந்து துலைஞ்சு, இங்க சரியான வெள்ளம் கண்டு சரியாக கஸ்டப்பட்டுப்போனம்.
இப்ப இங்க 4 நாளாத் தொடர்ந்து மழை பெய்யிறதை பார்த்தா எங்கட பாடு திட்டாட்டமாத்தான் இருக்கும்போல கிடக்கு.
தவறணைப்பக்கமும் வெள்ளம் வந்தா அவ்வளவுதான் எங்கடபாடுகள். இப்பவே தவறணையில சின்ன ஒழுக்கு இருக்குது பாருங்கோ. போனமுறை நிஷாக்குள்ள தவறணையின்ட முகடுதான் தெரிஞ்சுது. அந்தளவுக்கு வெள்ளம்.

ம்ம்ம்…ராத்திரியில மழை “சோ” எண்டு பெய்தா கொஞ்சம் சந்தோசம்தான் கண்டியளோ! போர்த்து மூடிக்கொண்டு படுத்தா சௌர்க்கம் கிட்டவா தெரியும் கண்டியளோ.
முந்தின காலங்களில மழைகாலம் எண்ட உடனேயே, அட மாரி வரப்போகுது என்று சொல்லி விறகுகள் வாங்கி, அதை பரனில அடுக்கிவைப்பினம், மழை பெய்யத்தொடங்கினால், வீட்டில கொறிக்கிறதுக்கு கச்சான் வறுத்து. இல்லையென்றால் கச்சான் பொரித்து தூள்போட்டு தருவினம் மழைக்குளிருக்கு சும்மா அந்த மாதிரித்தான் இருக்கும்பாருங்கோ.
இதெல்லாம் நான் ஓட்டைவிழுந்த அரைக்காட்சட்டையை கையால அடிக்கடி உயர்த்தி விட்டுக்கொண்டு திரிஞ்ச காலங்கள்.

அண்டைக்கு தொடக்கம் இண்டைக்கும் மட்டும் மழை வந்தால் தட்டுப்பாடாக இருக்கிறது பாண் மட்டும்தான். “மழைவந்தால் பாண் இருக்காது கெதியா போய் ரெண்டு ராத்தல் வாங்கிக்கொண்டு வை” என்று ஒவ்வொரு வீட்டிலும் சொன்னா, பாண் தட்டுப்பாடாகாமல் என்ன செய்யும்! அந்த நாள் தொடக்கம் இந்த நாள்வரை மழைக்கு பாண் வாங்கப்போய் தொடந்து ஏமாற்றப்பட்டுக்கொண்டுதானுங்கோ நானும் இருக்கிறன்.

இப்ப 4 நாளாக தொடர்ந்து என்று சொல்ல ஏலாது! இடைக்க விட்டுவிட்டுத்தான் என்றாலும் பெரிய மழைதான் பெய்துகொண்டிருக்குது. போனமுறை மாதிரி இல்லை. எண்டாலும் போனமுறை பட்டபாடு ஐயோ..
இப்பவும் கண்ணுக்க நிற்குது.
விழாது என்ற சொல்லி வைத்த மரமெல்லாம் முறிஞ்சு விழுந்திச்சுங்கோ, வீடுகள் முழுதும் வெள்ளம், ஒரு மரம் மிச்சமில்லை அத்தனையும் பொறிஞ்சு விழுந்துபோச்சு.
மழை நிண்டாப்பிறகு இதுகளை துப்பரவுபண்ண சனம்பட்டபாடுகள் என்ர ராசா..
கடைசியாக முனிசிப்பல்டி காரங்களுக்கு தனிப்பட்ட ரீதியிலும் காசு குடுத்துத்தான் எல்லா கஞ்சல்களையும் கிளியர் பண்ணி முடிச்சுதுகள் சனங்கள்.

அப்படி இந்த முறையும் வராது என்று நம்பிக்கை இருந்தாலும். சொல்ல ஏலாது தானே. கோதாரிவிழுந்த இந்த “நிஷா” மழை மட்டும் திரும்ப வரவே கூடாது.
அந்தளவுக்கு சனங்களை வாட்டிஎடுத்திச்சு போனவருசம்.
சரி..சரி..பயங்கரமா மின்னல்வேற அடிக்குது..கொம்பியூட்டர் புகைஞ்சாலும் புகைஞ்சுபோடும் பிறகு தவறணைக்கு வந்து உங்களோட கதைபறையவும் ஏலாது
நான் வாறன் நாளைக்கு…
போனமுறை யாழ்ப்பாணத்தில “நிஷா” காலநிலையின்ட விளையாட்டுக்கள் சிலவற்றை பாருங்கோ..













Thursday, November 5, 2009

எல்லாம் செப்படி வித்தை!


என்ன பார்க்கிறியள்! எங்கயோ கேள்விப்பட்டதுபோல கிடக்குது எண்டுதானே?
ஓம்ஓம்…இது எங்கடை நல்லூர்க்கோவில் தேரடிச் சித்தர் செல்லாப்சுவாமிகள் ஞானம் முத்திப்போய் கத்திக்கொண்டு திரிஞ்ச வசனங்களில ஒன்று.

ஞானம் முத்திப்போனா மட்டுமே இப்படி எல்லாம் பேசவரும்! அதைவிட நாலுக்கு மேல போத்திலுகள் உள்ள போனாலும், வசனங்கள் என்ன! நாலாயிரம் திவ்விய பிரபந்தங்களே வந்து இறங்கும்.
“அட முதல்ல அண்ணைக்கு ஊத்து! அண்ணை எப்பன் குடிக்காமல் என்ர நாக்கில ஒரு துளிபடாது ஓ..என்று பாசம் கொஞ்சல்களும், எனக்கு இவனில பிடிச்ச விசியமே இதுதானப்பா, எத்தனைதான் நான் பேசினாலும், அட அடிகூடப்போட்டாலும், அண்ணை அண்ணை என்று நாய்க்குட்டிபோல காலச்சுத்திவருவான்டா, பாசக்கார பெடியனப்பா என்ற அணைப்புகளும் சகஜமாக நிகழும்.

அட..இப்படி பாசம் நிறைந்த காட்சிகள் எல்லாம் இருக்கும்போது யாருங்க சொல்லுறது கள்ளுகுடிச்சா அடிபாடு வரும் என்று. பார்க்கப்போனா, “தவறணைகள்தான் சத்தமில்லாமல் பல உலகமாகா யுத்தங்களை நிப்பாட்டிக்கொண்டிருக்கு”. தவறணைதான் போக்கத்ததுகள் சிலதுகளுக்கு போக்கிடமாகவும், திக்கத்த சிலதுகளுக்கு தெய்வமாகவும் இருக்குது கண்டியளோ.

ஓவ்வொரு தவறணைக்கும் ஒவ்வொரு கதையிருக்கும். உள்ளுக்குள் வலிகள் கூட இருக்கும் பாருங்கோ. எந்த ஊரிலை தவறணை இருந்தாலும், இந்த அண்ணன் தம்பி கூடின குடும்பத்தில இருந்துதான் தவறணைக்கே பிரச்சினைகள் வரும்.
இருப்பாங்களப்பா எங்கட ராசபத்தை, கோசபத்தை போல நல்ல பாசமுள்ள சகோதரங்களாய். காணிப்பிரியல் என்று ஒரு பிரச்சினை வரேக்க ஆள்மாறி ஆள்மாறி தவறணையையும் பிரிக்கத்தான் நிற்பாங்கள்.

என்னடா இவன் தவறணையை விட்டுட்டு வாறானில்லை உதுக்குள்ளையே சுத்திக்கொண்டு நிக்கிறான் எண்டே பாக்கிறியள்.
எனக்கெண்டால் ஒன்றும் விழங்கேல்லை பாருங்கோ. ஏதோ உலகம் என்றுறாங்கள். ஐக்கியநாடுகள் சபை என்றுறாங்கள், உலகத்தை காப்பாத்திறதுபோல கைகள் கீறிக்கொண்டு கொடிகள் போடுறாங்கள்.

ஆனால் உலகத்தில பல மூலைகளில நடக்கிற விசியங்களை பார்த்தா தலை சுத்தி விழப்பாக்கிறன்.( போத்தில தொடாமலே) என்ன அநியாயமெல்லாம் நடக்குது.
அட ஒருக்கா, தெரியாத்தனமா, கொழிக்குஞ்சை பிடிச்சு கூட்டில விடப்போகும்போது
தெரியாத்தனமாக குஞ்சொன்றை மிதித்து சாக்கொண்டுபோட்டனுங்கோ. பின்னேரம் பெருமாள் கோவிலுக்கு போவம் என்று போனபோது கோவில் படியில கால் படவே மனம் கூசிப்போட்டு. உள்ளுக்க போகாமல் திரும்பி வந்திட்டனுங்கோ.

ஆனால் ஒருத்தன் இலட்சக்கணக்கான சனங்களை அந்தரிக்கவைத்து கொன்று குவிச்சப்போட்டு, பிரபலமான ஒரு கோவில்லபோய் பலிபீடத்தை தொட்டு கும்பிடுறான் எண்டால். கடவுள் இல்லையடாப்பா என்ற முடிவுக்குத்தான் வரவேண்டும்போல கிடக்கு.
உலகத்தைத்தான் பேக்காட்டுறாங்கள் எண்டால் இப்ப கடவுளையும் பேக்காட்டுறாங்கடாப்பா.

இது மட்டுமே உலகத்தில நடக்கிற அத்தனை விசியமும், ஏறு மாறாத்தான் நடக்கிறதுபோல கிடக்கு. 2012 இல உலகம் அழியப்போகுது ஏதோ மோதப்போகுது என்று சொல்லுறாங்கள், அப்படி ஒன்றுவந்து உலகத்தில் இருக்கிற முழுத்துலைவாற்ற தலையிலையும் விழுந்திச்சென்டா சந்தோசம்தான்.
இப்படி சுயநலம்பிடிச்ச உலகத்திலை இருக்கிறதை விட இல்லாமல்ப்போகலாம்.

ஆனால் நான் மட்டும் சாகத்தயாரில்லையுங்கோ, முழு உலகமும் அழியப்போகுது. எதுவும் மிஞ்சாது என்றால் நானும் சாகத்தயார். அதனாலதான் 2012இல மோதப்போற அந்த கல்லை உண்மையாலும் மோதச்சொன்னேன்.
அட நான் சொன்னதுகள் உங்களுக்கு விளங்கிச்சுதோ தெரியாது.

என்றாலும் ஒருக்கா அமைதியாக தனியாக இருந்து எதிலாவது சாய்ந்துகொண்டு கண்ணை மூடி இன்றைய உலக நடப்பக்களை யோசித்துபாருங்கோ..
கட்டாயம் செல்லப்பாச்சுவாமி வந்த எல்லாம் செப்படி வித்தை என்று சொல்லாட்டி என்னை செருப்பால அடி அண்ணை.
சரி நாளைக்கு சந்திப்பம்.

Wednesday, November 4, 2009

தவறணைத் திறப்புவிழா


எல்லோருக்கும் தவறணையின் அன்புகலந்த வணக்கங்கள்.

முதலிலே என்னை பற்றிய சிறிய ஒரு அறிமுகம்.
எனக்கு கவித்துவமாகவும் இலக்கிய நயமாகவும் எழுதவராதுங்கோ, அது நமக்கு வெகுதூரமுங்கோ, ஆனா “தமிழுக்கு வந்தசோதனையாக” எனக்கும் தமிழில் தட்டச்சி வலையில் பொறிக்க தெரியும். மனதில் என்ன தோணுதோ அதை அப்படியே சொல்லிவிடுவதுதாங்கோ எனது பழக்கம். இப்ப தனிமை வாட்டுவதாலையும், இணையவசதி வீட்டில் உள்ளதாலையும், பல கூட்டாளிகள் வலைப்பதிவுகள் வைத்திருப்பதாலும், நானும் ஒருக்கா எட்டிப்பார்ப்பம் எண்டு வந்தேனுங்கோ.

என்ரை கருத்துக்களையும் சிலராவது கேட்டு பதிலளிக்கவேண்டும், என்ற மன ஆசைகளாலும், என்ர பதிவுகளும் இணையத்தில் உலகம் முழுதும் வலம்வரவேண்டும் என்ற ஆசைகளாலும்தானுங்கோ பலபேர் வலைப்பதிவுகளை எழுதினம். ஒரு வகையில் இதுகள் நல்ல விடயமும் தானே?
எனக்கெண்டால் கற்பனை பண்ணி கதை எழுதவோ, அல்லது காத்திருந்து கவிதை எழுதவோ தெரியாது, ஆனா கண்ணால கண்டவைகள், காதுகளில் விழுந்தவைகள்,
ஊடகங்களில் அறிந்தவைகளை என்ர நடையில எழுத முடியும்.

“இது என்னடா மதுரைக்கு வந்த சோதனை” என்று பாலய்யா ஸ்ரைல்ல பலபேர் யோசிக்கிறது எனக்கு புரியுது.
அப்புறம் என்னடா தவறணை என்டு பெயர் என்று உங்களில் பலபேர் கேப்பிங்கள்.
கள்ளு விற்கும், கள்ளு குடிக்கும் தவறணைகளில்த்தான் பல விசியங்கள் காதில விழும் பாருங்கோ, சுப்பையாவின்ரை பேத்திய, காத்திகேசின்ற பேரன் கூட்டிக்கொண்டு ஓடினதில இருந்து, ஓபாமாவின்ட நாய்க்குட்டி மட்டும் கதைகள் சுவாரகசியமாக நடக்கும். அதுதான் இந்த பெயரை வச்சேன்.

இனி..வலைப்பூக்களை மேய்ந்துகொண்டு போகேக்க ஒரு எட்டு இந்த தவறணைப்பக்கமும் வந்துடோனும் கண்டியளோ!

உரிமையுடன்
உங்கள் டிலான்.