Showing posts with label தவறணை. Show all posts
Showing posts with label தவறணை. Show all posts

Friday, November 13, 2009

தவறணையில க்கியூவரிசை..

பேரன்பு மிக்க பெரியோர்களே, தாய்மார்களே, அண்ணன் தம்பிமாரே, அக்கா தங்கைமாரே.. வணக்கத்துடன் நான் சொல்லிக்கொள்வது என்வென்றால்..!!
இன்று தவறணையின்ட தலையங்கத்தை பார்த்திருப்பியள், என்னடா இவன் வழமையாக அலட்டுறமாதிரி தவறணையில குடிக்க க்யூவரிசை நிற்குது என்று எழுதுறான்போல என்று நினைத்தால், அங்கதான் நீங்க பிழைவிடுறியள்.
தலையங்கத்திலதான் நான் சொல்ல வந்த விசியம் அடங்கியிக்கு பாருங்கோ..
இன்னும் விளங்காட்டி இந்த “க்கியூவரிசை” தானுங்கோ அது!!

எங்கட ஆக்களில ஒரு பழக்கம் ஒன்று இருக்கு பாருங்கோ, கதைக்கேக்ககூட பல ரெட்டைபதிவுகளை அறியாமலே செய்துபோடுவினம். வித்தியாசமாக ஒரு கதை காதுவழிய வந்தால் உடன அதை திருவாய்களால் மொழிய வெளிக்கிட்டுப்போடுவினம்.
அட நாங்கள் கதைக்கிறது சரியோ, தப்போ என்றுகூட கணக்கில எடுக்கிறதில்லை, தங்கட பாட்டுக்கு அடுக்கிக்கொண்டே போறது.
இப்படி எங்கட கதைகளில பெரும்பாலும், ஒரே அர்த்தத்துடன் இங்கிலீசையும் தமிழிழையும் சேர்த்து கதைக்கும் பழக்கம் நான் உட்பட உங்களில பலபேருக்கு இருக்கும் கண்டியளோ.. கொஞ்ச சொல்லுகளை எடுத்துவிடுறன், நீங்கள் சொல்லுறனீயளோ இல்லையோ என்று ஒருக்கா சொல்லிப்பாருங்கோவன்..

பின்றிவேஸ்
கச்பிடி
நடுசென்ரர்
போஸ்ட்கட்டை
லைட்டுவெளிச்சம்
ஷோக்காட்டுறார்
க்கியூவரிசை
பொக்ஸ்பெட்டி
சவப்பெட்டிக் கொபின்
மதர்அம்மா
இப்படி அடக்கிக்கொண்டே போகலாம்.

இது இப்படி என்டால் இன்னும் ஒரு பகிடி என்னெண்டா, எங்கட சனம் ஒருபொருளாக எது முதலில வந்து “பேமஸ்” ஆகுதோ அதிண்டை பெயரைத்தான் பிறகுவாற எல்லா பிராண்டுக்கும் சொல்லிக்கொண்டே இருக்குங்கள்.
கண்டோஸ் எண்டால் உலகத்தில் இருக்கிற அத்தினை சொக்குலேட்டுக்கும் கண்டோஸ் தான் பெயர் கண்டியளோ! வெளிநாட்டில இருந்து யாராவது வந்தால் அதுகளிட்டயும்போய் “கண்டோஸ்” கொண்டுவந்தனியளோ என்றுதான் கேக்குங்கள் இந்த பேச்சனங்கள்.
அதுபோல சோடா, செல்டல், பாட்டா, கோட்டெக்ஸ், மக்கீ என்று சில பெயர்கள் இந்த சனங்களின்ர மனதில பதிஞ்சுபோட்டுது கண்டியளோ. அதுகளை மாத்துறது வலுங்கஸ்டம்.

அதுபோல இன்னொரு முக்கிமான விசியம் இங்க யாழ்ப்பாணத்தில இந்த லெமினேட் வேலைகளை செய்ய “கிளீன்கட்” எண்ட கடை ஒன்று போட்டு நல்ல பேமஸாக போனது ஒரு காலத்தில கண்டியளோ. ஆனா இண்டைக்கும் சில பெருசுகள், தங்கட ஐலேண்டிக்காட்டை லெமினேட்பண்ண கொண்டுவந்து கேட்குங்கள் எப்படி தெரியுமே??? “தம்பி இதை ஒருக்கா கிளின்கட் அடிச்சு தாறியளே எண்டுதான்”
இப்படி கதைக்கிற விசியங்களில் கனக்க விளையாட்டு இருக்கு கண்டியளோ.

சரி..இண்டைக்கு ஐப்பசி வெள்ளி கடைசி நாளுங்கோ. பின்னேரம் நல்லூர் சிவன்கோவிலில இயம சங்காரம் நடக்கும். முந்தித்தொடக்கம் இயமன் வந்து, சிவகுமாருக்கு.. இல்லை இல்லை, மார்க்கண்டேயருக்கு கயிறுவீசி சிவலிங்கத்துக்குள்ள இருந்து சிவபெருமான் வந்து இயமனை உதைய, இயமன் அப்படியே பின்னால கவுண்டு விழுவதுமட்டும் நின்று பார்ப்பன். பிறகு அன்னவாகனத்தில பிரம்மா வந்து சிவனோட நெகோஷிகேஸன் பண்ணி அவரை உயிர்ப்பித்த உடன, அந்த இடத்தில நிற்காமல் ஓடிடுவன் கண்டியளோ..
எதுக்கும் இயமன் என்னை பார்த்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கைதான்.

Friday, November 6, 2009

ஐயோ..இந்த முறையும் “நிஷாவோ”?


அண்ணை இந்தப்பக்கம் சரியான மழை அண்ணை. அங்காலப்பக்கங்களில எப்படி என்று தெரியாது. போனமுறையும், ஆகாயம் திறந்து கண்டறியாத இந்த “நிஷா” வந்து துலைஞ்சு, இங்க சரியான வெள்ளம் கண்டு சரியாக கஸ்டப்பட்டுப்போனம்.
இப்ப இங்க 4 நாளாத் தொடர்ந்து மழை பெய்யிறதை பார்த்தா எங்கட பாடு திட்டாட்டமாத்தான் இருக்கும்போல கிடக்கு.
தவறணைப்பக்கமும் வெள்ளம் வந்தா அவ்வளவுதான் எங்கடபாடுகள். இப்பவே தவறணையில சின்ன ஒழுக்கு இருக்குது பாருங்கோ. போனமுறை நிஷாக்குள்ள தவறணையின்ட முகடுதான் தெரிஞ்சுது. அந்தளவுக்கு வெள்ளம்.

ம்ம்ம்…ராத்திரியில மழை “சோ” எண்டு பெய்தா கொஞ்சம் சந்தோசம்தான் கண்டியளோ! போர்த்து மூடிக்கொண்டு படுத்தா சௌர்க்கம் கிட்டவா தெரியும் கண்டியளோ.
முந்தின காலங்களில மழைகாலம் எண்ட உடனேயே, அட மாரி வரப்போகுது என்று சொல்லி விறகுகள் வாங்கி, அதை பரனில அடுக்கிவைப்பினம், மழை பெய்யத்தொடங்கினால், வீட்டில கொறிக்கிறதுக்கு கச்சான் வறுத்து. இல்லையென்றால் கச்சான் பொரித்து தூள்போட்டு தருவினம் மழைக்குளிருக்கு சும்மா அந்த மாதிரித்தான் இருக்கும்பாருங்கோ.
இதெல்லாம் நான் ஓட்டைவிழுந்த அரைக்காட்சட்டையை கையால அடிக்கடி உயர்த்தி விட்டுக்கொண்டு திரிஞ்ச காலங்கள்.

அண்டைக்கு தொடக்கம் இண்டைக்கும் மட்டும் மழை வந்தால் தட்டுப்பாடாக இருக்கிறது பாண் மட்டும்தான். “மழைவந்தால் பாண் இருக்காது கெதியா போய் ரெண்டு ராத்தல் வாங்கிக்கொண்டு வை” என்று ஒவ்வொரு வீட்டிலும் சொன்னா, பாண் தட்டுப்பாடாகாமல் என்ன செய்யும்! அந்த நாள் தொடக்கம் இந்த நாள்வரை மழைக்கு பாண் வாங்கப்போய் தொடந்து ஏமாற்றப்பட்டுக்கொண்டுதானுங்கோ நானும் இருக்கிறன்.

இப்ப 4 நாளாக தொடர்ந்து என்று சொல்ல ஏலாது! இடைக்க விட்டுவிட்டுத்தான் என்றாலும் பெரிய மழைதான் பெய்துகொண்டிருக்குது. போனமுறை மாதிரி இல்லை. எண்டாலும் போனமுறை பட்டபாடு ஐயோ..
இப்பவும் கண்ணுக்க நிற்குது.
விழாது என்ற சொல்லி வைத்த மரமெல்லாம் முறிஞ்சு விழுந்திச்சுங்கோ, வீடுகள் முழுதும் வெள்ளம், ஒரு மரம் மிச்சமில்லை அத்தனையும் பொறிஞ்சு விழுந்துபோச்சு.
மழை நிண்டாப்பிறகு இதுகளை துப்பரவுபண்ண சனம்பட்டபாடுகள் என்ர ராசா..
கடைசியாக முனிசிப்பல்டி காரங்களுக்கு தனிப்பட்ட ரீதியிலும் காசு குடுத்துத்தான் எல்லா கஞ்சல்களையும் கிளியர் பண்ணி முடிச்சுதுகள் சனங்கள்.

அப்படி இந்த முறையும் வராது என்று நம்பிக்கை இருந்தாலும். சொல்ல ஏலாது தானே. கோதாரிவிழுந்த இந்த “நிஷா” மழை மட்டும் திரும்ப வரவே கூடாது.
அந்தளவுக்கு சனங்களை வாட்டிஎடுத்திச்சு போனவருசம்.
சரி..சரி..பயங்கரமா மின்னல்வேற அடிக்குது..கொம்பியூட்டர் புகைஞ்சாலும் புகைஞ்சுபோடும் பிறகு தவறணைக்கு வந்து உங்களோட கதைபறையவும் ஏலாது
நான் வாறன் நாளைக்கு…
போனமுறை யாழ்ப்பாணத்தில “நிஷா” காலநிலையின்ட விளையாட்டுக்கள் சிலவற்றை பாருங்கோ..













Thursday, November 5, 2009

எல்லாம் செப்படி வித்தை!


என்ன பார்க்கிறியள்! எங்கயோ கேள்விப்பட்டதுபோல கிடக்குது எண்டுதானே?
ஓம்ஓம்…இது எங்கடை நல்லூர்க்கோவில் தேரடிச் சித்தர் செல்லாப்சுவாமிகள் ஞானம் முத்திப்போய் கத்திக்கொண்டு திரிஞ்ச வசனங்களில ஒன்று.

ஞானம் முத்திப்போனா மட்டுமே இப்படி எல்லாம் பேசவரும்! அதைவிட நாலுக்கு மேல போத்திலுகள் உள்ள போனாலும், வசனங்கள் என்ன! நாலாயிரம் திவ்விய பிரபந்தங்களே வந்து இறங்கும்.
“அட முதல்ல அண்ணைக்கு ஊத்து! அண்ணை எப்பன் குடிக்காமல் என்ர நாக்கில ஒரு துளிபடாது ஓ..என்று பாசம் கொஞ்சல்களும், எனக்கு இவனில பிடிச்ச விசியமே இதுதானப்பா, எத்தனைதான் நான் பேசினாலும், அட அடிகூடப்போட்டாலும், அண்ணை அண்ணை என்று நாய்க்குட்டிபோல காலச்சுத்திவருவான்டா, பாசக்கார பெடியனப்பா என்ற அணைப்புகளும் சகஜமாக நிகழும்.

அட..இப்படி பாசம் நிறைந்த காட்சிகள் எல்லாம் இருக்கும்போது யாருங்க சொல்லுறது கள்ளுகுடிச்சா அடிபாடு வரும் என்று. பார்க்கப்போனா, “தவறணைகள்தான் சத்தமில்லாமல் பல உலகமாகா யுத்தங்களை நிப்பாட்டிக்கொண்டிருக்கு”. தவறணைதான் போக்கத்ததுகள் சிலதுகளுக்கு போக்கிடமாகவும், திக்கத்த சிலதுகளுக்கு தெய்வமாகவும் இருக்குது கண்டியளோ.

ஓவ்வொரு தவறணைக்கும் ஒவ்வொரு கதையிருக்கும். உள்ளுக்குள் வலிகள் கூட இருக்கும் பாருங்கோ. எந்த ஊரிலை தவறணை இருந்தாலும், இந்த அண்ணன் தம்பி கூடின குடும்பத்தில இருந்துதான் தவறணைக்கே பிரச்சினைகள் வரும்.
இருப்பாங்களப்பா எங்கட ராசபத்தை, கோசபத்தை போல நல்ல பாசமுள்ள சகோதரங்களாய். காணிப்பிரியல் என்று ஒரு பிரச்சினை வரேக்க ஆள்மாறி ஆள்மாறி தவறணையையும் பிரிக்கத்தான் நிற்பாங்கள்.

என்னடா இவன் தவறணையை விட்டுட்டு வாறானில்லை உதுக்குள்ளையே சுத்திக்கொண்டு நிக்கிறான் எண்டே பாக்கிறியள்.
எனக்கெண்டால் ஒன்றும் விழங்கேல்லை பாருங்கோ. ஏதோ உலகம் என்றுறாங்கள். ஐக்கியநாடுகள் சபை என்றுறாங்கள், உலகத்தை காப்பாத்திறதுபோல கைகள் கீறிக்கொண்டு கொடிகள் போடுறாங்கள்.

ஆனால் உலகத்தில பல மூலைகளில நடக்கிற விசியங்களை பார்த்தா தலை சுத்தி விழப்பாக்கிறன்.( போத்தில தொடாமலே) என்ன அநியாயமெல்லாம் நடக்குது.
அட ஒருக்கா, தெரியாத்தனமா, கொழிக்குஞ்சை பிடிச்சு கூட்டில விடப்போகும்போது
தெரியாத்தனமாக குஞ்சொன்றை மிதித்து சாக்கொண்டுபோட்டனுங்கோ. பின்னேரம் பெருமாள் கோவிலுக்கு போவம் என்று போனபோது கோவில் படியில கால் படவே மனம் கூசிப்போட்டு. உள்ளுக்க போகாமல் திரும்பி வந்திட்டனுங்கோ.

ஆனால் ஒருத்தன் இலட்சக்கணக்கான சனங்களை அந்தரிக்கவைத்து கொன்று குவிச்சப்போட்டு, பிரபலமான ஒரு கோவில்லபோய் பலிபீடத்தை தொட்டு கும்பிடுறான் எண்டால். கடவுள் இல்லையடாப்பா என்ற முடிவுக்குத்தான் வரவேண்டும்போல கிடக்கு.
உலகத்தைத்தான் பேக்காட்டுறாங்கள் எண்டால் இப்ப கடவுளையும் பேக்காட்டுறாங்கடாப்பா.

இது மட்டுமே உலகத்தில நடக்கிற அத்தனை விசியமும், ஏறு மாறாத்தான் நடக்கிறதுபோல கிடக்கு. 2012 இல உலகம் அழியப்போகுது ஏதோ மோதப்போகுது என்று சொல்லுறாங்கள், அப்படி ஒன்றுவந்து உலகத்தில் இருக்கிற முழுத்துலைவாற்ற தலையிலையும் விழுந்திச்சென்டா சந்தோசம்தான்.
இப்படி சுயநலம்பிடிச்ச உலகத்திலை இருக்கிறதை விட இல்லாமல்ப்போகலாம்.

ஆனால் நான் மட்டும் சாகத்தயாரில்லையுங்கோ, முழு உலகமும் அழியப்போகுது. எதுவும் மிஞ்சாது என்றால் நானும் சாகத்தயார். அதனாலதான் 2012இல மோதப்போற அந்த கல்லை உண்மையாலும் மோதச்சொன்னேன்.
அட நான் சொன்னதுகள் உங்களுக்கு விளங்கிச்சுதோ தெரியாது.

என்றாலும் ஒருக்கா அமைதியாக தனியாக இருந்து எதிலாவது சாய்ந்துகொண்டு கண்ணை மூடி இன்றைய உலக நடப்பக்களை யோசித்துபாருங்கோ..
கட்டாயம் செல்லப்பாச்சுவாமி வந்த எல்லாம் செப்படி வித்தை என்று சொல்லாட்டி என்னை செருப்பால அடி அண்ணை.
சரி நாளைக்கு சந்திப்பம்.

Wednesday, November 4, 2009

தவறணைத் திறப்புவிழா


எல்லோருக்கும் தவறணையின் அன்புகலந்த வணக்கங்கள்.

முதலிலே என்னை பற்றிய சிறிய ஒரு அறிமுகம்.
எனக்கு கவித்துவமாகவும் இலக்கிய நயமாகவும் எழுதவராதுங்கோ, அது நமக்கு வெகுதூரமுங்கோ, ஆனா “தமிழுக்கு வந்தசோதனையாக” எனக்கும் தமிழில் தட்டச்சி வலையில் பொறிக்க தெரியும். மனதில் என்ன தோணுதோ அதை அப்படியே சொல்லிவிடுவதுதாங்கோ எனது பழக்கம். இப்ப தனிமை வாட்டுவதாலையும், இணையவசதி வீட்டில் உள்ளதாலையும், பல கூட்டாளிகள் வலைப்பதிவுகள் வைத்திருப்பதாலும், நானும் ஒருக்கா எட்டிப்பார்ப்பம் எண்டு வந்தேனுங்கோ.

என்ரை கருத்துக்களையும் சிலராவது கேட்டு பதிலளிக்கவேண்டும், என்ற மன ஆசைகளாலும், என்ர பதிவுகளும் இணையத்தில் உலகம் முழுதும் வலம்வரவேண்டும் என்ற ஆசைகளாலும்தானுங்கோ பலபேர் வலைப்பதிவுகளை எழுதினம். ஒரு வகையில் இதுகள் நல்ல விடயமும் தானே?
எனக்கெண்டால் கற்பனை பண்ணி கதை எழுதவோ, அல்லது காத்திருந்து கவிதை எழுதவோ தெரியாது, ஆனா கண்ணால கண்டவைகள், காதுகளில் விழுந்தவைகள்,
ஊடகங்களில் அறிந்தவைகளை என்ர நடையில எழுத முடியும்.

“இது என்னடா மதுரைக்கு வந்த சோதனை” என்று பாலய்யா ஸ்ரைல்ல பலபேர் யோசிக்கிறது எனக்கு புரியுது.
அப்புறம் என்னடா தவறணை என்டு பெயர் என்று உங்களில் பலபேர் கேப்பிங்கள்.
கள்ளு விற்கும், கள்ளு குடிக்கும் தவறணைகளில்த்தான் பல விசியங்கள் காதில விழும் பாருங்கோ, சுப்பையாவின்ரை பேத்திய, காத்திகேசின்ற பேரன் கூட்டிக்கொண்டு ஓடினதில இருந்து, ஓபாமாவின்ட நாய்க்குட்டி மட்டும் கதைகள் சுவாரகசியமாக நடக்கும். அதுதான் இந்த பெயரை வச்சேன்.

இனி..வலைப்பூக்களை மேய்ந்துகொண்டு போகேக்க ஒரு எட்டு இந்த தவறணைப்பக்கமும் வந்துடோனும் கண்டியளோ!

உரிமையுடன்
உங்கள் டிலான்.