Thursday, November 5, 2009

எல்லாம் செப்படி வித்தை!


என்ன பார்க்கிறியள்! எங்கயோ கேள்விப்பட்டதுபோல கிடக்குது எண்டுதானே?
ஓம்ஓம்…இது எங்கடை நல்லூர்க்கோவில் தேரடிச் சித்தர் செல்லாப்சுவாமிகள் ஞானம் முத்திப்போய் கத்திக்கொண்டு திரிஞ்ச வசனங்களில ஒன்று.

ஞானம் முத்திப்போனா மட்டுமே இப்படி எல்லாம் பேசவரும்! அதைவிட நாலுக்கு மேல போத்திலுகள் உள்ள போனாலும், வசனங்கள் என்ன! நாலாயிரம் திவ்விய பிரபந்தங்களே வந்து இறங்கும்.
“அட முதல்ல அண்ணைக்கு ஊத்து! அண்ணை எப்பன் குடிக்காமல் என்ர நாக்கில ஒரு துளிபடாது ஓ..என்று பாசம் கொஞ்சல்களும், எனக்கு இவனில பிடிச்ச விசியமே இதுதானப்பா, எத்தனைதான் நான் பேசினாலும், அட அடிகூடப்போட்டாலும், அண்ணை அண்ணை என்று நாய்க்குட்டிபோல காலச்சுத்திவருவான்டா, பாசக்கார பெடியனப்பா என்ற அணைப்புகளும் சகஜமாக நிகழும்.

அட..இப்படி பாசம் நிறைந்த காட்சிகள் எல்லாம் இருக்கும்போது யாருங்க சொல்லுறது கள்ளுகுடிச்சா அடிபாடு வரும் என்று. பார்க்கப்போனா, “தவறணைகள்தான் சத்தமில்லாமல் பல உலகமாகா யுத்தங்களை நிப்பாட்டிக்கொண்டிருக்கு”. தவறணைதான் போக்கத்ததுகள் சிலதுகளுக்கு போக்கிடமாகவும், திக்கத்த சிலதுகளுக்கு தெய்வமாகவும் இருக்குது கண்டியளோ.

ஓவ்வொரு தவறணைக்கும் ஒவ்வொரு கதையிருக்கும். உள்ளுக்குள் வலிகள் கூட இருக்கும் பாருங்கோ. எந்த ஊரிலை தவறணை இருந்தாலும், இந்த அண்ணன் தம்பி கூடின குடும்பத்தில இருந்துதான் தவறணைக்கே பிரச்சினைகள் வரும்.
இருப்பாங்களப்பா எங்கட ராசபத்தை, கோசபத்தை போல நல்ல பாசமுள்ள சகோதரங்களாய். காணிப்பிரியல் என்று ஒரு பிரச்சினை வரேக்க ஆள்மாறி ஆள்மாறி தவறணையையும் பிரிக்கத்தான் நிற்பாங்கள்.

என்னடா இவன் தவறணையை விட்டுட்டு வாறானில்லை உதுக்குள்ளையே சுத்திக்கொண்டு நிக்கிறான் எண்டே பாக்கிறியள்.
எனக்கெண்டால் ஒன்றும் விழங்கேல்லை பாருங்கோ. ஏதோ உலகம் என்றுறாங்கள். ஐக்கியநாடுகள் சபை என்றுறாங்கள், உலகத்தை காப்பாத்திறதுபோல கைகள் கீறிக்கொண்டு கொடிகள் போடுறாங்கள்.

ஆனால் உலகத்தில பல மூலைகளில நடக்கிற விசியங்களை பார்த்தா தலை சுத்தி விழப்பாக்கிறன்.( போத்தில தொடாமலே) என்ன அநியாயமெல்லாம் நடக்குது.
அட ஒருக்கா, தெரியாத்தனமா, கொழிக்குஞ்சை பிடிச்சு கூட்டில விடப்போகும்போது
தெரியாத்தனமாக குஞ்சொன்றை மிதித்து சாக்கொண்டுபோட்டனுங்கோ. பின்னேரம் பெருமாள் கோவிலுக்கு போவம் என்று போனபோது கோவில் படியில கால் படவே மனம் கூசிப்போட்டு. உள்ளுக்க போகாமல் திரும்பி வந்திட்டனுங்கோ.

ஆனால் ஒருத்தன் இலட்சக்கணக்கான சனங்களை அந்தரிக்கவைத்து கொன்று குவிச்சப்போட்டு, பிரபலமான ஒரு கோவில்லபோய் பலிபீடத்தை தொட்டு கும்பிடுறான் எண்டால். கடவுள் இல்லையடாப்பா என்ற முடிவுக்குத்தான் வரவேண்டும்போல கிடக்கு.
உலகத்தைத்தான் பேக்காட்டுறாங்கள் எண்டால் இப்ப கடவுளையும் பேக்காட்டுறாங்கடாப்பா.

இது மட்டுமே உலகத்தில நடக்கிற அத்தனை விசியமும், ஏறு மாறாத்தான் நடக்கிறதுபோல கிடக்கு. 2012 இல உலகம் அழியப்போகுது ஏதோ மோதப்போகுது என்று சொல்லுறாங்கள், அப்படி ஒன்றுவந்து உலகத்தில் இருக்கிற முழுத்துலைவாற்ற தலையிலையும் விழுந்திச்சென்டா சந்தோசம்தான்.
இப்படி சுயநலம்பிடிச்ச உலகத்திலை இருக்கிறதை விட இல்லாமல்ப்போகலாம்.

ஆனால் நான் மட்டும் சாகத்தயாரில்லையுங்கோ, முழு உலகமும் அழியப்போகுது. எதுவும் மிஞ்சாது என்றால் நானும் சாகத்தயார். அதனாலதான் 2012இல மோதப்போற அந்த கல்லை உண்மையாலும் மோதச்சொன்னேன்.
அட நான் சொன்னதுகள் உங்களுக்கு விளங்கிச்சுதோ தெரியாது.

என்றாலும் ஒருக்கா அமைதியாக தனியாக இருந்து எதிலாவது சாய்ந்துகொண்டு கண்ணை மூடி இன்றைய உலக நடப்பக்களை யோசித்துபாருங்கோ..
கட்டாயம் செல்லப்பாச்சுவாமி வந்த எல்லாம் செப்படி வித்தை என்று சொல்லாட்டி என்னை செருப்பால அடி அண்ணை.
சரி நாளைக்கு சந்திப்பம்.

10 comments:

Jana said...

ஒரு பொள்ளாப்பும் இல்லை, எப்போதோ முடிந்த காரியம்.

சயந்தன் said...

உண்மைதான் இப்ப அடிக்கடி செல்லப்பா சாமிதான் வந்துபோகின்றார்.

Unknown said...

தவறணை போகப்போக களைகட்டப்போகுதுதான் போல இருக்கு. வாழ்த்துக்கள் டிலான்.

தங்க முகுந்தன் said...

ஜனா எழுதியதில் சில சொற்களில் பிழையிருக்கிறது! ஒரு பொல்லாப்புமில்லை!
மேலும்
முழுதும் உண்மை!
அது அப்படித்தான் நூதனமொன்றுமில்லை!
சுத்திச் சுத்தி சுப்பற்றை கொல்லை!
காயமொரு சித்திரக் கோயில்
எப்பவோ முடிந்த காரியம்!
எல்லாஞ் சிவன் செயல்!
சும்மா இரு!
நாமறியோம்!

இந்த வசனங்கள் யாவும் அந்த தேரடி - விசர்ச் செல்லப்பா பரம்பரையின் வாக்கியங்கள்!

தெரியாத்தனமாக குஞ்சொன்றை மிதித்து சாக்கொண்டுபோட்டனுங்கோ.
ஏறு மாறாத்தான் நடக்கிறதுபோல கிடக்கு.

அருமையான வரிகள் இதைவிட பல உள்ளன.

என்ன எழுதுவதெனத் தெரியவில்லை.

அருமை!

நேரில்(தொலைபேசியில்) கதைக்கவேண்டும்!

அடலேறு said...

போகிற போக்கில் நயமாக தவறை குத்திவிட்டு காட்டுகிற எழுத்துப்பாங்க உங்களுக்கு உள்ளது. நல்ல எழுத்து நடை நண்பரே

டிலான் said...

//எப்போதோ முடிந்த காரியம்.//

ஓம் ஜனா அண்ணா, எல்லாம் எப்போதோ முடிந்த காரியங்கள்போலதான் கிடக்கு நடப்புக்களை பார்த்தா..

டிலான் said...

//உண்மைதான் இப்ப அடிக்கடி செல்லப்பா சாமிதான் வந்துபோகின்றார்//

கவனம் சயந்தன் அவர் அடிக்கடி வந்துபோனா இன்னும் ஒரு யோகர்சுவாமியாக தாங்கள் உருவாகினாலும் உருவாகிவிடுவீர்கள்.

டிலான் said...

//தவறணை போகப்போக களைகட்டப்போகுதுதான் போல இருக்கு. வாழ்த்துக்கள் டிலான்.//

தங்கள்போல நல்ல உள்ளங்கள் வந்துபோனாலே களைகட்டிவிடும் விநோத்

டிலான் said...

நன்றி முகுந்தன் அண்ணா. எனக்கு தெரியும் செல்லப்பா சுவாமிகள் பற்றி எழுதினா கட்டாயம் நீங்கள் சில தகவல்கள் தருவியள் என்று. ஜனா அண்ணா கடவுள் நம்பிக்கை அற்றவர். வேண்டும் என்றே எழுத்தை பிழையா எழுதியியும் இருப்பார்.
நீங்களோ பக்தகோடி. ஜனா அண்ணாவோ கடவுள் மறுப்பு, இன்னும் இரண்டுபேருக்கும் சில முரண்பாடுகளும் உண்டு ஆனால் நீங்கள் இருவரும் இனிய நண்பர்களாக இருப்பதை பார்த்து பெருமை கொள்கின்றேன். அண்ணா.
இதுதான் உண்மையான வலைப்பதிவாளர்களுக்கு தேவை. உங்க மாறிமாறி புடுங்குப்படுறவைகளுக்கு நீங்கள் இரண்டுபேரும் நல்ல ஒரு உதாரணம். நன்றிகள் அண்ணா..

டிலான் said...

//குத்திவிட்டு காட்டுகிற எழுத்துப்பாங்க உங்களுக்கு உள்ளது//
நன்றிகள் நண்பர் அடலேறாரே. தொடர்ந்தும் வாருங்கள்.