Friday, November 6, 2009
ஐயோ..இந்த முறையும் “நிஷாவோ”?
அண்ணை இந்தப்பக்கம் சரியான மழை அண்ணை. அங்காலப்பக்கங்களில எப்படி என்று தெரியாது. போனமுறையும், ஆகாயம் திறந்து கண்டறியாத இந்த “நிஷா” வந்து துலைஞ்சு, இங்க சரியான வெள்ளம் கண்டு சரியாக கஸ்டப்பட்டுப்போனம்.
இப்ப இங்க 4 நாளாத் தொடர்ந்து மழை பெய்யிறதை பார்த்தா எங்கட பாடு திட்டாட்டமாத்தான் இருக்கும்போல கிடக்கு.
தவறணைப்பக்கமும் வெள்ளம் வந்தா அவ்வளவுதான் எங்கடபாடுகள். இப்பவே தவறணையில சின்ன ஒழுக்கு இருக்குது பாருங்கோ. போனமுறை நிஷாக்குள்ள தவறணையின்ட முகடுதான் தெரிஞ்சுது. அந்தளவுக்கு வெள்ளம்.
ம்ம்ம்…ராத்திரியில மழை “சோ” எண்டு பெய்தா கொஞ்சம் சந்தோசம்தான் கண்டியளோ! போர்த்து மூடிக்கொண்டு படுத்தா சௌர்க்கம் கிட்டவா தெரியும் கண்டியளோ.
முந்தின காலங்களில மழைகாலம் எண்ட உடனேயே, அட மாரி வரப்போகுது என்று சொல்லி விறகுகள் வாங்கி, அதை பரனில அடுக்கிவைப்பினம், மழை பெய்யத்தொடங்கினால், வீட்டில கொறிக்கிறதுக்கு கச்சான் வறுத்து. இல்லையென்றால் கச்சான் பொரித்து தூள்போட்டு தருவினம் மழைக்குளிருக்கு சும்மா அந்த மாதிரித்தான் இருக்கும்பாருங்கோ.
இதெல்லாம் நான் ஓட்டைவிழுந்த அரைக்காட்சட்டையை கையால அடிக்கடி உயர்த்தி விட்டுக்கொண்டு திரிஞ்ச காலங்கள்.
அண்டைக்கு தொடக்கம் இண்டைக்கும் மட்டும் மழை வந்தால் தட்டுப்பாடாக இருக்கிறது பாண் மட்டும்தான். “மழைவந்தால் பாண் இருக்காது கெதியா போய் ரெண்டு ராத்தல் வாங்கிக்கொண்டு வை” என்று ஒவ்வொரு வீட்டிலும் சொன்னா, பாண் தட்டுப்பாடாகாமல் என்ன செய்யும்! அந்த நாள் தொடக்கம் இந்த நாள்வரை மழைக்கு பாண் வாங்கப்போய் தொடந்து ஏமாற்றப்பட்டுக்கொண்டுதானுங்கோ நானும் இருக்கிறன்.
இப்ப 4 நாளாக தொடர்ந்து என்று சொல்ல ஏலாது! இடைக்க விட்டுவிட்டுத்தான் என்றாலும் பெரிய மழைதான் பெய்துகொண்டிருக்குது. போனமுறை மாதிரி இல்லை. எண்டாலும் போனமுறை பட்டபாடு ஐயோ..
இப்பவும் கண்ணுக்க நிற்குது.
விழாது என்ற சொல்லி வைத்த மரமெல்லாம் முறிஞ்சு விழுந்திச்சுங்கோ, வீடுகள் முழுதும் வெள்ளம், ஒரு மரம் மிச்சமில்லை அத்தனையும் பொறிஞ்சு விழுந்துபோச்சு.
மழை நிண்டாப்பிறகு இதுகளை துப்பரவுபண்ண சனம்பட்டபாடுகள் என்ர ராசா..
கடைசியாக முனிசிப்பல்டி காரங்களுக்கு தனிப்பட்ட ரீதியிலும் காசு குடுத்துத்தான் எல்லா கஞ்சல்களையும் கிளியர் பண்ணி முடிச்சுதுகள் சனங்கள்.
அப்படி இந்த முறையும் வராது என்று நம்பிக்கை இருந்தாலும். சொல்ல ஏலாது தானே. கோதாரிவிழுந்த இந்த “நிஷா” மழை மட்டும் திரும்ப வரவே கூடாது.
அந்தளவுக்கு சனங்களை வாட்டிஎடுத்திச்சு போனவருசம்.
சரி..சரி..பயங்கரமா மின்னல்வேற அடிக்குது..கொம்பியூட்டர் புகைஞ்சாலும் புகைஞ்சுபோடும் பிறகு தவறணைக்கு வந்து உங்களோட கதைபறையவும் ஏலாது
நான் வாறன் நாளைக்கு…
போனமுறை யாழ்ப்பாணத்தில “நிஷா” காலநிலையின்ட விளையாட்டுக்கள் சிலவற்றை பாருங்கோ..
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
நல்ல பகிடியாக இருக்கு எனக்கு உந்த பாசைய நீர் பேச!
சத்தியமாத்தான் சொல்லுறன்! இஞ்ச சுவிசில யாரும் உப்பிடிக் கதைக்கிறேலயப்பா!
"நிஷா" புயலின் நினைவுகளை மீட்டுவதாகவும், அது பற்றி விரிவாக தெரியாதவர்களுக்கு ஒரு விளக்கமாகவும் உங்களது பாணியிலேயே அழகாக தந்திருந்தீர்கள். என்னவோ தெரியவில்லை தவறணைக்குள்ள வந்த உடனேயே "நம்ம ஏரியா" என்ற உணர்வை உங்கள் எழுத்துக்கள் கொண்டுவந்துவிடுகின்றது. தொடரட்டும். அடாது மழை பெய்தாலும் விடாது தவறணை திறந்திருக்கட்டும்.
எவ்வளவு வெக்கையையும் தாங்கலாம். மிதமிஞ்சின மழையை தாங்க ஏலாதுதான்.
செய்த பாவங்களுக்கு இப்ப கடவுளும் சேர்ந்து கனக்கத்தான் சோதிக்கிறானோ?
நன்றி முகுந்தன் அண்ணா. எங்கள் கலாச்சாத்தை மட்டும் அல்ல, நாங்கள் மொழிபேசும் தொனி, பாணியைக்கூட பாதுகாக்கவேண்டும் என நினைக்கின்றேன். அதுதான் எங்கள் பாணியிலேயே எழுதி சரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றேன்.
//என்னவோ தெரியவில்லை தவறணைக்குள்ள வந்த உடனேயே "நம்ம ஏரியா" என்ற உணர்வை உங்கள் எழுத்துக்கள் கொண்டுவந்துவிடுகின்றது//
ஓம்..ஜனா அண்ணா, இது உங்கள் ஏரியாதான். உத்தரவில்லாமல் நீங்கள் எப்போதும் உள்ளவரலாம்.
//மிதமிஞ்சின மழையை தாங்க ஏலாதுதான்.//
உண்மைதான் உசா அக்கா. தொடர்ந்து மழை பெய்தா தாங்கவே ஏலாது.
//செய்த பாவங்களுக்கு இப்ப கடவுளும் சேர்ந்து கனக்கத்தான் சோதிக்கிறானோ?//
ஓம் அண்ணை நடக்கிறதுகளை பார்த்தா அப்படித்தான் கிடக்கு.
Post a Comment