Monday, November 9, 2009

உதயன் பத்திரிகையின் முக்கிமானதொரு ஆசிரியர் தலையங்கம்.


தேச வழமைச் சட்டத்துக்குத் திருத்தம் அந்த மக்களிடமிருந்து வரவேண்டும்

இலங்கைத் தீவில் சட்டம் இயற்றும் அதிகாரம் இலங்கை யின் நாடாளுமன்றத்துக்கே உரியது. பராதீனப்படுத்த முடி யாத நாடாளுமன்ற உரிமை அது.
ஆனால் இலங்கையில் தனி ஒரு குழுமத்தின் அல்லது ஓர் இனத்தின் நலன் சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பில் அந்த இனத்தின் அல்லது குழுமத்தின் கலந்தாய்வோ, பங்களிப்போ இன்றி நாடாளுமன்றம் தான்தோன்றித்தனமாக சட்டங்களை நிறைவேற்றி நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது. அப்படிச் செய்வது நீதியற்றது; முறையற்றது; ஒழுங்கற்றது.

இலங்கையின் சிறுபான்மை இனத்தவர்களான தமிழர் களைப் பொறுத்தவரை அத்தகைய முறையற்ற சட்டங்களை சுதந்திர இலங்கையின் நாடாளுமன்றம் அதன் தொடக்க காலம் தொட்டே நிறைவேற்றி வந்திருக்கின்றது என்பதுதான் அவர் களின் பட்டறிவு. இன விரோதக் குரோதம் மற்றும் காழ்ப் புணர்வின் பெறுபேறுகளை அரங்கேற்றும் அரங்கமாக நாடாளு மன்றத்தைப் பயன்படுத்திய பேரினவாதம், அந்தச் சட்டமியற் றும் அதிகாரத்தைத் தன் கையில் வைத்துக்கொண்டு எதேச் சாதிகாரமாக நடந்துகொண்டது; நடந்துகொண்டும் இருக் கின்றது. அதன் விளைவாகத்தான் அறுவடையாகத்தான் மிகக் கோரமான அழிவுகளைத் தந்த இந்த உள்நாட்டு யுத்தத்தை இலங்கைத்தீவு காணவேண்டிய துர்ப்பாக்கியம் ஏற் பட்டது. பல்லாயிரம் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன; இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடியது. எங்கும் பேரழிவு. நாசம். கொடூரம்.
இப்போதும், இந்த யுத்தத்தில் வென்ற பின்னரும் கூட, மேலாதிக்க வெறியும் மேலாண்மைத் திமிரும் ஆதிக்கத் தரப் புக்கு அடங்குவதாக இல்லை. அடிமைப்படுத்தல் கொடூரம் நீங்குவதாக இல்லை.

அடக்கி ஒடுக்கப்பட்ட பாதிக்கப்பட்ட சிறுபான்மையினரான தமிழர்களின் நீதியான அபிலாஷைகளைக் கவனத் தில் எடுப்பார் எவருமில்லை. அவர்களின் நியாயமான ஆதங் கங்களை செவிமடுப்பார் யாருமில்லை.
இந்த நிலையில்தான், இலங்கையின் வடக்குத் தமிழர் களின் பாரம்பரிய சட்டமான "தேச வழமையை" அரசு மறு சீரமைக்கப் போகின்றது என்ற செய்தி வெளியாகியிருக் கின்றது.
வடக்குத் தமிழர் தாயகத்தில் பல நூற்றாண்டு காலமாகக் கைக்கொள்ளப்பட்டு வரும் வழக்காறுகள், சம்பிரதாயங்கள், பழக்க முறைகள், பண்பாட்டுக் கோலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதே தேச வழமைச் சட்டமாகும். வட பகுதியில் கணிசமான பிரதேசத்தில் காலாதி காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த இந்த நடைமுறையை 1706 இல் ஒல்லாந்தர்கள் முத லில் கட்டுக்கோப்பான ஒழுங்கு விதிகளாகக் கட்டமைத்தனர்.

பின்னர் 1806 இல் பிரிட்டிஷ் காலனித்துவ அரசு அதற்கு சட்ட அந்தஸ்து அளித்தது. 1869 இலும், 1911 இலும் சில புதிய ஏற்பாடுகள், ஒழுங்கமைப்புகள் அதற்குப் புகுத்தப்பட்டன.
1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் வட பகுதி மக்களுக்கான சட்ட முறைமையாக அது ஒப்புக் கொள் ளப்பட்டுத் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
மாறிவரும் உலகில், நவீன சிந்தனைப் போக்குகளுக்கு ஏற்ப சட்டங்களும் மாற்றமடைய வேண்டியவைதான். பழைமை பேணல் என்ற பெயரில் நாம் பத்தாம் பசலித்தனமாக நடந்து கொள்ள முடியாது. தேவைக்கு ஏற்ப சட்டங்களில் நீக்கமும் சேர்த்தலும் தவிர்க்க முடியாதவையே.

அந்தவகையில் தேச வழமைச் சட்டத்திலும் சில பின் னடைவுகள் இருக்கின்றமை சட்ட அறிஞர்களாலும், நீதித் துறைசார் நிபுணர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டே வந்துள்ளது. குறிப்பாக சொத்துரிமைகள் தொடர்பில் பெண்களுக்கு உள்ள பாதிப்புகள் குறித்து விமர்சிக்கப்பட்டே வருகின்றது.
காலத்தின் தேவை கருதி, நவீன உலகப் போக்கில் பெண் களின் சமவுரிமை பற்றிய உறுதிப்பாட்டின் அடிப்படையில், இச்சட்டங்களில் மாற்றம் செய்யப்படவேண்டியமை தவிர்க்க முடியாததாக உள்ளது என்பது ஏற்கத்தக்கதே.
ஆனால், அந்த மாற்றங்களை எத்தகைய வழிமுறைகள் ஊடாகச் செய்வது, அது விடயம் தொடர்பில் கைக்கொள்ளப் படவேண்டிய மார்க்கம் யாது என்பவையெல்லாம் ஆழ்ந்து சிந்திக்கப்படவேண்டியனவாகும்.

இந்தத் தேசவழமைச் சட்டம் வடக்கு இலங்கையைப் பூர் வீகமாகவும், பாரம்பரியமாகவும் கொண்ட விசேட மக்கள் கூட்டத்துக்கென சிறப்பாகவும், விசேடமாகவும், தனித்துவ மாகவும் கைக்கொள்ளப்படும் ஒரு சட்ட ஏற்பாடாகும்.
வடக்கு இலங்கையைப் பாரம்பரிய தாயகமாகக்கொண்ட தமிழ் இனத்தவர்கள் மத்தியிலே நுட்பமான ஆழமான சட்ட அறிவுகொண்ட மேதைகள் இருக்கின்றார்கள். புத்திஜீவிகள் உள்ளனர். கல்விமான்கள் அலங்கரிக்கின்றார் கள். தவிரவும் நாடாளுமன்றத்திலும், பிற உள்ளூராட்சி அமைப்புகளிலும் மக்களின் பிரதிநிதிகள் உள்ளனர்.
எனவே, வட பகுதி சமூகத்துக்கு விசேடமாக உரித்தான தேசவழமைச் சட்டத்தை மறுசீரமைக்கும் விடயத்தில் அந்த வட பகுதி சமூகத்தின் பங்களிப்பும், இசைவும், இணக்க முமே மிக முக்கியமானவையும் பிரதானமானவையுமாகும்.

கொழும்பில் இருக்கும் ஒருசிலரை வைத்துக்கொண்டு இந்தக் கைங்கரியத்தை ஒப்பேற்றுவது ஒரு வகையில் வட பகுதித் தமிழர்களின் சிறப்புரிமையைப் பலவீனப்படுத்தி, சிதைக்கும் நடவடிக்கையாகவே அர்த்தப்படுத்தப்படும். கொழும்பின் மேலாதிக்கத்தை மேலாண்மையை வட பகுதித் தமிழர்கள் மீது வல்வந்தமாகத் திணிக்கும் நடவடிக் கையாக அது அமைந்துவிடலாம்.
எனவே, தேச வழமைச் சட்டத்தை மறுசீரமைப்பு செய்வது அவசியம் என்று கருதப்பட்டால், முதலில் அதற்கான வாதப் பிரதிவாத ஆய்வுகளுக்கான களம் வடக்கில் திறக்கப் படவேண்டும். அந்தச் சமூகத்தின் கருத்தை உள்வாங்கி, அதற்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனடிப்படையில் செயற்பட சம்பந்தப்பட்டோர் முன்வரவேண்டும். அதுதான் நியாயம். செய்வார்களா?
அதைவிடுத்து, கொழும்பில் முடிவுசெய்து, யாழ்ப்பாணத் தில் அதைத் திணிப்பது மற்றொரு இன அடக்குமுறை வடிவ மாகிவிடும்.

1 comment:

சத்தியசீலன் said...

எங்கட ஜீ.ஜீயர்ட மூளையால இதுவரை காலமும் மற்ற தமிழ் இடங்களை சிங்களவர்களிடம் பறிகொடுத்ததுபோல பறிகொடுக்காமல் இருப்பதற்கும், யாழ்ப்பாண தனித்துவத்தை பேணுவதற்காகவும், எமது நிலத்தின் உரிமைகள், முடிவுகளை தீர்மானிப்பவர்கள் நாமே என்று கூறும்படியான புத்திசாலித்தனமான ஒரு சட்டம் "தேச வழமைச்சட்டம்".
யாழ்ப்பாணத்தின்மீது சிங்களவர்களுக்கு எப்போதோ கண் விழுந்துவிட்டது. ஆனால் போராட்டத்திற்கு முற்பட்ட காலத்திலேயே சிங்கள குடியேற்றங்கள் வரவிடாமல் இந்த தேசவழமைச்சட்டமே அந்த மண்ணை காப்பாற்றியது.
இப்ப மேலும் குள்ளநரிப்புத்தியில இதிலும் கைவைக்க தீர்மானம் போடினம் போல..!!